கிரிக்கெட் விளையாட்டில் கடைசிவரை ஒரு போட்டி எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். எளிதாக வெல்லக்கூடிய ஒரு போட்டி தோல்வியில் முடிவதும் தோல்வியில் முடியக்கூடிய ஒரு போட்டி வெற்றியில் முடிவதும் இவ்வகை விளையாட்டில் நடக்கக் கூடிய ஒன்றாகும். அப்படி கிரிக்கெட் வரலாற்றில் ஆச்சரியப்படும் அளவுக்கு அதே சமயம் நம்ப முடியாத அளவுக்கு நடந்த சம்பவங்களை இதில் பார்ப்போம்.
1 சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான இவர்கள் மூவரும் அடித்த இரட்டை சதங்கள் மிகவும் ஆச்சரியப்பட வைக்கக்கூடியது. கிரிக்கெட்டின் கடவுள் என்று பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தான் இந்த சாதனையை முதலில் செய்தவர். அதன்பின் விரேந்திர சேவாக் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். நான் மட்டும் சளைத்தவன் இல்லை என்று இந்திய அணியின் ஓபனிங் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
2 மகேந்திரசிங் தோனி அடித்த இரண்டு சதங்கள்.
இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் தனது முதல் சதத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்தார் 2005ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் 148 ரன்கள் விளாசினார். இது ஒருநாள் போட்டிகளில் தோனி அடித்த முதல் சதமாகும். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார்.இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் அந்த போட்டியிலும் அவர் எடுத்த ரன்கள் 148 தான். சொல்லி அடித்ததுபோல் இரண்டு முதல் சதங்கள்(148), அதுவும் அதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக அமைந்தது.\
3 இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள்.
1877 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின ஆச்சரியமாக அந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இறுதியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4 அலஸ்டேர் குக் + மைக்கேல் கிளார்க் = சச்சின் டெண்டுல்கர்.
51 சதங்கள் உட்பட மொத்தம் 15,921 ரன்கள் அடித்து கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார். அதன்பின்,ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பெர்த் மைதானத்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் மைக்கல் கிளார்க் மற்றும் அலெஸ்டர் தங்களது 100வது டெஸ்ட் போட்டியை ஆடினார்கள். போட்டி முடிவில், குக் 7955 ரன்கள் அடித்தார். அதில் 25 சதங்களும் அடங்கும். மைக்கல் கிளார்க், 7964 ரன்கள் சேர்த்திருந்தார்.அவர் மொத்தம் 26 டெஸ்ட் சதம் விளாசி இருந்தார். இரண்டு பேர் அடித்த டெஸ்ட் ரன்கள் மட்டும் சதங்கள் இரண்டையும் கூட்டினால், சச்சின் அடித்த டெஸ்ட் ரன்கள் & சதங்கள் வரும்.
5 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி
பெங்களூர் அணி 2013 ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக அதிகபட்சமாக 263 ரன்கள் குவித்தது. இதுவே ஐபிஎல் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும். பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணிக்கு எதிராக 49 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
எனவே அதிக ரன்களை அடித்து அணியாகவும் அதேசமயம் குறைந்த ரன்களை எடுத்த அணியாகவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது திகழ்ந்து வருகிறது. அந்த இரண்டு சம்பவங்களும் நடந்தது ஒரே நாளான ஏப்ரல் 23-ம் தேதிதான்.
6 டென்னிஸ் லில்லி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்.
டெனிஸ் லில்லி நவம்பர் 27ஆம் தேதி 1981ம் வருடம் தன்னுடைய 56வது டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் 54 டெஸ்ட் போட்டிகளில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் என்னவென்றால் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 300 ஆவது டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதும் அதே நவம்பர் 27ஆம் தேதி அன்று தான். இதன்மூலம் இருவரும் தங்களது 300வது டெஸ்ட் விக்கெட்டை ஒரே நாளில் எடுத்து சாதனை படைத்தது ஆச்சரியமான ஒன்றாகும்.