விளையாட்டிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கும் நம் நாட்டில் கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் ரசிகர்கள் மிக மிக அதிகம். ஒவ்வொரு வீரர்களுக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளங்கள் உண்டு. ஆனால் சர்வதேச கிரிக்கெட் அணியில் உள்ள சில வீரர்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெறுத்து வந்தனர். அதற்கு முழு காரணம் அவர்கள் இந்தியாவிற்கு எதிராக சிலஅருவருக்கத்தக்க விஷயங்களை செய்ததுதான். குறிப்பாக 4 அயல் நாட்டு வீரர்கள் செய்த செயல் இந்திய ரசிகர்களால் இன்றளவும் மறக்கவே முடியாது.
அன்ரூ பிளின்டாப்: 2002 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு முத்தொடர் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. கடைசி விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பிளின்டாப் தனது டீ-சர்ட்டை கழட்டி கொண்டு வெற்று உடலுடன் மைதானம் முழுவதும் சுற்றிக்கொண்டே ஓடினார். இது இந்திய ரசிகர்களால் இன்றளவும் மறக்கமுடியாத ஒரு அருவருக்கத்தக்க செயலாக பார்க்கப்படுகிறது. அதன்பின் அதற்கு தக்க பதிலடியாக நேட் வெஸ்ட் சீரியஸ்யை இங்கிலாந்து நாட்டில் கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தனது மேல்சட்டையை கழற்றி சுற்றினார்.
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்: 2008ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து டெண்டுல்கரும், ஹர்பஜன்சிங்கும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஹர்பஜன்சிங்கிற்கும், ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கும் ஏதோ தகராறு ஏற்பட்டது. அதன்பின் ஹர்பஜன், தன்னை குரங்கு என திட்டியதாக சைமண்ட்ஸ் புகார் அளித்தார்.
இது அந்த நேரத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஹர்பஜன் சிங் தான் அவ்வாறு திட்டவில்லை என்று மறுத்தார். இதனாலேயே இந்திய ரசிகர்களிடம் அவப்பெயர் சம்பாதித்துக் கொண்டார் சைமண்ட்ஸ்.
முஷ்பிக்குர் ரஹிம்: வங்கதேசத்திற்கு ஆடிவரும் ரஹீம் இளம் வயதிலேயே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவருக்கு ஏனோ இந்திய அணியை ஆரம்பத்திலிருந்தே பிடிப்பதில்லை. இந்தியா ஒரு போட்டியில் தோற்றுவிட்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணியை தாழ்த்திப் பேசுவதும், எதிரணியினரை பாராட்டிப் பேசுவதும் இவருடைய வழக்கம். இந்தியா ஒருமுறை வங்கதேசத்தை தோல்வியடையச் செய்தது அதன்பின் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்றது. இதனை சித்தரிக்கும் விதமாக இந்தியாவின் தோல்வியை பார்த்து ரஹீம் இன்று தான் நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன் என்று ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் இந்திய ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார்.
ஜாவித் மியான்தத்: பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் என்றால் எலியும் பூனையும் போல தான். அதுவும் இவ்விரு நாடுகளுக்கிடையே போட்டி ஒன்று நடந்தால் களத்திலேயே அனல் பறக்கும். 1992 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஜாவித் மியான்தத் குரங்கு போல் குதித்து இந்திய அணியின் விக்கெட் கீப்பரான கிரண் மோரை கிண்டல் செய்தார். அதற்கு முன் டெண்டுல்கர் வீசிய பந்தில் கிரண் மோர் நடுவரிடம் அவுட் கேட்டு குதித்தார். அதற்கு பதிலாக இவ்வாறு நடந்து கொண்டார் மியான்தத். அவரின் இந்த செயல் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் வெறுப்படையச் செய்தது.