உலகநாயகன் கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில்தான் நடிகை ஷிவானி இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வந்தது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கமல், விக்ரம் படத்தில் நடித்து முடித்ததும் இந்தியன்-2 படத்தின் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க உள்ளதாக கூறினார்.
ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முன்னதாக லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக தகவல் வந்தது, பிரச்சனைகள் அனைத்தும் முடிந்தபின்னர் கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விக்ரம், இந்தியன் 2 படங்களில் நடித்து முடித்த பின்னர், பிரபல மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதை சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார் கமல்.
மகேஷ் நாராயணன் இயக்க உள்ள மலையாள படத்துக்கு கமல்ஹாசன் திரைக்கதை அமைக்க உள்ளாராம். சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாலிக் என்கிற மலையாள படத்தை மகேஷ் நாராயணன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படம் தேவர்மகன்-2 என தற்போது தகவல் வந்துள்ளது. 1992 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் சிவாஜி, கமல், நடிப்பில் வெளியான தேவர்மகன் கமல்ஹாசனின் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப்படம் ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு கடைசியில் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படம் எப்போது தொடங்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. விரைவில் இந்த படம் தொடங்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.