நேருக்கு நேராக மோதவிருக்கும் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி.. இது முதல் முறை அல்ல.

சமீபகாலமாக முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியானால் அவரது ரசிகர்கள் அதை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருவது வழக்கம். தற்போது ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் டான். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா மற்றும் எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நானும் ரவுடி தன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த இரண்டு படங்களும் அடுத்த வருடம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரே நாளில் திரைக்கு வர இருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் இவர்கள் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் மோதுவதால் எந்த படம் வெற்றியடையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரது திரைப்படமும் ஒரே நாளில் மோதுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்பே 2013ஆம் ஆண்டு எதிர்நீச்சல் மற்றும் சூது கவ்வும் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது.

அதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ரெமோ மற்றும் ரெக்க ஆகிய இரண்டு படங்களும் இணைந்து வெளியானது. தற்போது மூன்றாம் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி மோத உள்ளன. இந்த செய்தியை அவர்களின் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.