வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஓ சொல்றியா பாடலால் வந்த வினை.. விவேகாவிற்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் இளம் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படம் வரும் 17 ஆம் தேதி ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக நாடு முழுவதும் வெளியாக உள்ளது.

விரைவில் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது புஷ்பா படத்தில் பிரபல நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இப்பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதன் பாடல் வரிகள் ஆண்களை வக்கிரபுத்தி கொண்டவர்களாக சித்தரிக்கும் வகையில் உள்ளது என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த பாடல் வரிகளை பிரபல பாடலாசிரியர் விவேகா எழுத நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாடியுள்ளார். இதனால் தற்போது இவர்கள் இருவருக்கும் சிக்கல் உண்டாகியுள்ளது. பாடல் வரிகள் எழுதிய விவேகா மீதும் பாடலை பாடிய ஆண்ட்ரியா மீதும் ஆந்திர மாதர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.

மேலும், பாடலாசிரியர் விவேகாவிற்கு தொடர்ந்து பல விமர்சனங்கள் எழுந்து வருகிறதாம். காசு கொடுத்தால் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் எழுதுவாயா? ஆண்ட்ரியா ஒரு தமிழ் பெண் கிடையாது. ஆனால் உங்களுக்கு தமிழ் நன்றாக தெரியுமல்லவா? அப்படி இருந்தும் எப்படி இதுபோன்ற ஒரு பாடல் வரிகளை எழுத முடிந்தது என பலர் தாறுமாறாக விவேகாவை விமர்சித்து வருகிறார்களாம்.

முன்னதாக பெண்களை அவமதித்து பீப் சாங் பாடியதாக கூறி நடிகர் சிம்புவிற்கு எதிராக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு வழக்கும் தொடர்ந்தார்கள். தற்போது ஆண்களை இழிவுப்படுத்தியதாக கூறி ஒரு பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது இதுவே முதல் முறை. பரவாயில்லை ஆண்களுக்கும் குரல் கொடுக்க சங்கம் உள்ளது என பல ஆண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending News