என் இனிய தமிழ் மக்களே நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதி ராஜா பேசுகிறேன். நீங்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள். இந்த மண்ணோடும், மக்களோடும், நான் சார்ந்து வாழ்ந்ததை தான் திரைப்படங்களின் வாயிலாக சொல்லியிருக்கிறேன் என்ற வாசகம் பாரதிராஜாவின் படங்களில் ஆரம்பத்திலேயே இடம்பெறும்.
பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. இப்படத்தை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுமே கிராமத்து சாயலை கொண்டுள்ளதால் பாரதிராஜாவுக்கு கிராமத்து படங்கள் தான் எடுக்கத் தெரியும் என்று கோலிவுட்டில் பேச்சு கிளம்பியது.
இதனால் பாரதிராஜா க்ரைம் த்ரில்லரான சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்தார். இப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். அப்போது தமிழ் சினிமாவில் காதல் இளவரசனாக இருந்த கமலுக்காகவே உருவாக்கப்பட்ட கதையாக இருந்தது. சிகப்பு ரோஜாக்கள் இளம் வயதில், பெண்களால் பாதிக்கப்பட்ட ஒரு சைக்கோ கில்லர் பற்றிய கதை.
இப்படத்தில் கமல் ஒரு சைக்கோ என தெரிந்தபின், ஸ்ரீதேவியின் நடிப்பு அனைவரையும் பிரமிக்கும்படி இருந்தது. சிகப்பு ரோஜாக்கள் படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிராமத்துக் கதை மட்டுமே எடுக்க கூடியவர் என்ற பாரதிராஜாவின் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட சிகப்பு ரோஜாக்கள் படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் ஈரா குலாபிலு எனும் பெயரில் சிகப்பு ரோஜாக்கள் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஹிந்தியில் ரெட் ரோஸ் எனும் பெயரில், ராஜேஷ் கன்னா நடிப்பில், இயக்குனர் பாரதிராஜாவே படத்தை ரீமேக் செய்திருந்தார். தற்போது சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை பாரதிராஜா தயாரிக்க அவரது மகன் மனோஜ் இயக்கவுள்ளார்.