வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

தமிழில் தேசிய விருதை தட்டிச் சென்ற 6 நடிகைகள்.. முத்தழகை மிஞ்ச யாருமில்லை

இந்திய அரசால் சினிமா துறையை கௌரவவிக்கப்படும் மிக உயரிய விருது தேசிய விருது. சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம் சிறந்த இயக்குனர் என பல அம்சங்களின் அடிப்படையில் பிரபலங்களை தேர்ந்தெடுத்து இந்த விருது கொடுக்கப்படுகிறது. அவ்வாறு தமிழ் சினிமாவில் தேசிய விருது பெற்ற நடிகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

சரண்யா பொன்வண்ணன்: தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருந்தார் சரண்யா பொன்வண்ணன். இவரை சுற்றி தான் கதையே நகருகிறது. மகன் முருகையன் சாராயம் குடித்து வந்தாலும் அவன் மேல் காட்டும் பாசமாகட்டும், மகனுக்குப் பெண் பார்ப்பது என இப்படத்தில் ஒரு கள்ளிக்காட்டு தாயாகவே வாழ்ந்தார் சரண்யா. இப்படத்திற்காக தேசிய விருது பெற்றார் சரண்யா பொன்வண்ணன்.

பிரியாமணி: கார்த்தி அறிமுகப் படமான பருத்திவீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரியாமணி. இப்படத்தில் கிராமத்தின் சாயல் கொஞ்சமும் மாறாமல் வீரப் பெண்ணாக நடித்திருந்தார் பிரியாமணி. பருத்திவீரன் படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் பிரியாமணி பிரபலமானார். பிரியாமணி ஏற்று நடித்த அழுத்தமான கதாப்பாத்திரத்தால் இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

அர்ச்சனா: பாலுமகேந்திரா இயக்கத்தில் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வீடு. அர்ச்சனா இப்படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சுதாவாக நடித்திருந்தார். வீடு கட்டுவதற்காக பல இன்னல்களை சந்தித்து ஒரு வழியாக வீடு கட்டிய பின் அது மாநகர நீர் திட்டத்துக்கானது என்று அரசு சொல்கிறது. கடைசியில் போராடி வீட்டை எப்படி மீட்கிறார் என்பதே வீடு. இப்படத்திற்காக அர்ச்சனாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

சுஹாசினி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சுலக்சனா, சுஹாசினி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிந்து பைரவி. இப்படத்தில் சுஹாசினி ஏற்று நடித்த சிந்து கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்து பைரவி படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை சுஹாசினி பெற்றார்.

ஷோபா: பசி படத்திற்காக ஷோபாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அது மட்டுமல்லாமல் சிறந்த படம் பசி என்று இப்படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது. மேக்கப் போடாமல், பாட்டு, நடனம் இல்லாமல் 22 நாட்களில் எடுக்கப்பட்ட படம் பசி. இப்படத்தில் ஷோபாவின் நடிப்புக்காக அவருக்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது.

லட்சுமி: ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் என்ற சிறுகதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படத்தில் கங்காவாக நடித்திருந்தார் லட்சுமி. இப்படத்தில் கங்கா பாலியல் ரீதியாக எதிர்பாராமல் பாதிக்கப்படுகிறார். இதனால் அவரின் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளே சில நேரங்களில் சில மனிதர்கள். இப்படத்தில் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த லட்சுமிக்கு தேசிய விருது கிடைத்தது.

Trending News