தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், அரசியல்வாதி என அனைத்திலும் சகலகலா வல்லவன் கமலஹாசன். இவருக்கு அடுத்தபடியாக பல திறமைகள் கொண்ட ஐந்து இளம் நடிகர்களை பார்க்கலாம்.
சிலம்பரசன்: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சிலம்பரசன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. சிம்பு நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர், தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். கமலுக்கு அடுத்தபடியாக சகலகலா வல்லவன் என்றால் அது சிம்பு தான்.
தனுஷ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தனுஷ் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடகர், பாடலாசிரியர் என பல பரிமாணங்கள் உடையவர். இவை அனைத்திலும் தன்னுடைய திறமையால் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்: சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து தற்போது மாஸ் ஹீரோவாக உள்ளவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், உதவி இயக்குனர் என பல பரிமாணங்கள் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
ஜிவி பிரகாஷ்: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி புகழ்பெற்றவர் ஜிவி பிரகாஷ். இதைத்தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் பல படங்களை தயாரித்தும் வருகிறார். நடிகர், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என ஜிவி பன்முகத்தன்மை கொண்டுள்ளார்.
ஹிப்ஹாப் ஆதி: வணக்கம் சென்னை படத்தில் இடம்பெற்ற சென்னை சிட்டி கேங்க்ஸ்டர் என்ற பாட்டின் மூலம் பாடகராக திரைப்படத்தில் அறிமுகமானார் ஆதி. அதன்பிறகு ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். இதைத் தொடர்ந்து மீசையமுறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் ஹிப்ஹாப் ஆதி அறிமுகமானார்.