தமிழ்சினிமாவை அடுத்த தரத்திற்கு எடுத்துச் சென்றதில் முக்கிய பங்கு உலகநாயகன் கமலஹாசனுக்கு உண்டு. வெளிநாட்டில் உள்ள தொழில்நுட்பங்களை தன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கமலஹாசன் கொண்டு வந்துள்ளார். மேலும், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் பல அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளார்.
இந்நிலையில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலஹாசனின் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. ஏனென்றால் அரசியல், பிக் பாஸ் என கமல் அதில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இப்படியே போனால் வேலைக்காகாது என மீண்டும் முழுவீச்சில் சினிமாவில் இறங்கி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒப்பந்தம் செய்து வருகிறார் கமலஹாசன்.
இது ஒரு பக்கமிருக்க தயாரிப்பிலும் முழுவீச்சில் இறங்கி உள்ளார். சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இணைந்து நடிக்கும் படத்தை கமலஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கமலஹாசன் பங்கு பெற்றார்.
அப்போது பேசிய கமல், என்னை ஷாப்பிங் மால், சொத்து என சினிமாவைத் தாண்டி பல விஷயங்கள் முதலீடு செய்யுங்கள் என பலர் என்னிடம் கூறியுள்ளார்கள். ஆனால் நான் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில்தான் முதலீடு செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தேன்.
மேலும் இந்த பணம் எதிர்காலத்தில் மக்களுக்கு செலவிடப்படும் என கமலஹாசன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். பெரும்பாலும் நடிகர், நடிகைகள் தங்களது மார்க்கெட் உள்ள போது பணம் சம்பாதித்து வேறு தொழில்களில் முதலீடு செய்து கொள்வார்கள். ஆனால் கமலின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.