வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வசூல் வேட்டையாடும் விக்ரம்.. நேரில் வந்து வாழ்த்துச் சொன்ன பாலிவுட், டோலிவுட் மெகாஸ்டார்ஸ்

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆகி தற்போது வரை சர்வதேச அளவில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளியான ஒரு வாரத்தை கடந்த நிலையிலும் இன்னும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

அந்த அளவிற்கு இந்த படத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை கமலஹாசன் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மேலும் விக்ரம் படத்திற்கு எந்த விதமான எதிர்மறை விமர்சனமும் இல்லாமல் கோலிவுட் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி இதுவரை உலக அளவில் 250 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அத்துடன் இதுவரை கமல் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படமாக விக்ரம்படம் பார்க்கப்படுவதால் உலக நாயகனும் ஆனந்தத்தில் திக்குமுக்காடி போயிருக்கிறார்.

அத்துடன் இந்திய திரை பிரபலங்கள் பலரும் கமலஹாசனுக்கு தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வாழ்த்துக்களை குவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலாய் 2 திரை பிரபலங்கள் கமலஹாசனை நேரில் சந்தித்து அவருடைய சந்தோசத்தைப் பகிர்ந்திருக்கின்றனர்.

தற்போது ஹைதராபாத்தில் இருக்கும் கமலஹாசனை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இருவரும் நேரில் சந்தித்து மலர் கொத்தும் பொன்னாடை அணிவித்தும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்.

இவர்களுடன் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் உடன் இருக்கிறார். லோகேஷ்க்கும் சிரஞ்சீவி மற்றும் சல்மான்கான் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

kamal-cinemapettai
kamal-cinemapettai

Trending News