வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான ஆரோக்கியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று முன்னணியில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் வெற்றிக்கு காரணமான 7 யுக்திகளை பற்றிய கட்டுரை இது.
கச்சிதமான திரைக்கதை: ஒரு படத்தின் வெற்றி அதன் கதையில் இல்லை. திரைக்கதையில் உள்ளது. இதனை கூறியது திரைக்கதை மன்னன் பாக்யராஜ். திரைக்கதை என்பது பல காட்சிகளின் தொகுப்பு. அதாவது காட்சிக்கு காட்சி ஒரு தொடர்பும், யதார்த்தமும், ஈர்ப்பும் இருக்கவேண்டியது அவசியம். அந்த வகையில் லோகேஷ் படங்களில் திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். மேலும் அதற்க்காகவேண்டி நேரம் ஒதுக்கப்படும். இதன் காரணமாகவே அவரது படங்களில் திரைக்கதை சலிப்பு தட்டாமல் இருக்கிறது. இது அவர் இயக்கிய மாநகரம் முதல் விக்ரம் வரை கடைபிடிக்கப்படுகிறது. திரைக்கதையை எழுதிய பிறகு படத்திற்கு கிளம்புவது.
அதிரடி ஸ்டண்ட்: இவரது படத்தில் இன்னொரு கதாநாயகன் என்றால் அது ஸ்டண்ட் காட்சிகள். சண்டை காட்சிகளை நம்பகமாக எடுக்கிறோமா என்பதை விட, நம்பும்படியாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதே பிரதான கேள்வி! இவரது படங்களில் சண்டை காட்சிகள் அருமையாக எடுப்பப்பட்டிருக்கும். மேலும் அதற்கு ஏற்றார் போல அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். மாநகரம் படத்திலும் சரி, கைதியிலும் சரி, அந்த சண்டை காட்சிகளை அருமையாக அமைத்திருந்தார்கள் அதன் ஸ்டண்ட் மாஸ்டர்கள்.
கதைக்காக நாயகர்கள்: அவரது எந்த படமும் நாயகனுக்காக விளையவில்லை. மாஸ்டர் தவிர மற்ற மூன்று படங்களிலும் கதாநாயகர்களை முதன்மையாக்கி, கதை பின்னால் வரவில்லை. கமல், விஜய் போன்ற பெரிய நடிகர்களை இயக்கும்போது கூட கதையை தெளிவாக கூறி, அவர்களை ஒத்துக்கொள்ள வைத்து படமாக்கி இருக்கிறார் லோகேஷ். விக்ரம் படத்தில் முதல் பாதியில் 15 நிமிடங்கள் மட்டுமே கமலுக்கு வேலை என்பதே இதற்கான சிறந்த உதாரணம்.
வலிமையான வில்லன்கள்: ஒரு படத்தின் வெற்றிக்கு வில்லன்களின் பலம் முக்கியம். நம்பியார் இல்லையென்றால் எம்ஜியாரின் பலம் மக்களுக்கு தெரியப்போவதில்லை. இந்த உண்மையை தெளிவாக புரிந்துகொண்டு உள்ளார் லோகேஷ். அதன் காரணமாகவே, கைதி, மாஸ்டர், விக்ரம் என்று எல்லாப்படங்களிலும் வில்லன்களை சிறப்பாக கட்டமைத்திருந்தார். அதிலும் மாஸ்டர் விஜய் சேதுபதி வேற லெவல்.
பாடல்கள் இல்லாமை: நாம் ஓடிடி காலத்தில் வாழ்கிறோம். அவனவன் பாடல்கள் வந்தால் எழுந்து ஓடிவிடுகிறான் அல்லது ஓட்டி பார்த்துக்கொள்கிறேன். இளையராஜா, ரஹ்மான் போல படங்களை பாடல்களால் ஓட வைக்க இனிமேலும் முடியாது. அதன் காரணமாக பெரும்பாலும் இவரது படங்களில் மரத்தை சுற்றி பாடும் டூயட் இல்லை, ஹீரோ இன்றோ பாடல் இல்லை. மான்டேஜ் பாடல்கள் மட்டுமே இடம்பெறுகிறது என்பது முக்கிய அம்சம்.
நேர்த்தியான படத்தொகுப்பு: இவரது படங்கள் நீளமானவை என்றாலும் கூட நேர்த்தியான, கட்சிதமான படத்தொகுப்பால் அந்த நீளம் தெரியாமல் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. கைதி, மாஸ்டர், விக்ரம் என மூன்றுமே இரண்டே முக்கால் மணி நேரத்திற்கு மேல் ஓடுகிறது. ஆனாலும் படம் எங்குமே போரடிக்காத வண்ணம் காட்சிக்கு காட்சி கத்திரி போடுவது தெரியாமல் இயல்பாக உருவாக்கி உள்ளார் லோகேஷ்.
சிறந்த நடிகர்களின் தேர்வு: பெரிய படமோ, சிறிய படமோ, அவர் படங்களில் அந்த கதாபத்திற்கான தேர்வு மிகச்சிறப்பாக இருக்கும். இது மாநகரம் முதலே அவர் கடைபிடித்து வருகிறார். அதில் சார்லி கதாபாத்திரம் அதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. விக்ரம் படத்திலும் கூட சிறிய சிறிய ரோல்களில் திறமையான, வளர்ந்து வரும் நடிகர்களை சிறப்பாக பயன்படுத்தி உள்ளார். உதாரணமாக ரமேஷ் திலக், ஜாபர், மற்றும் பலர்.