MGR – Thalapathy Vijay: இன்றைய காலகட்டத்தில் FDFS என்னும் முதல் நாள் முதல் காட்சி மோகம் அதிகமாக இருக்கிறது. தனக்கு பிடித்த நடிகர்களின் படத்தை முதல் நாள், முதல் காட்சியை பார்த்தால் தான் உண்மையான ரசிகன் என்பது போல் மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. இதை நன்றாக உற்று கவனித்தால், வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக கிளப்பிவிட்ட ஒன்று தான்.
நமக்கு பிடித்த நடிகராகவே இருக்கட்டும் நம்மால் முடியும் பொழுது அந்த படத்தை பார்த்தால் போதும் என இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டாலே திரையரங்குகள் அடங்கிவிடும். அப்படி இல்லாமல் இந்த எஃப்டிஎப்எஸ் பின்னால் ஓடுவதால் திரையரங்குகள் டிக்கெட் விலையை எக்கச்சக்கமாக ஏற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதற்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பது தான் தளபதி விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படம்.
லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், திரையரங்குகளில் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பித்து இருக்கிறது. விஜய் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டே இருக்கிறார்கள். திரையரங்குகளும் இது போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களில் பணத்தை அள்ளினால் தான் உண்டு என அந்த படத்தின் டிக்கெட் 2500 லிருந்து 3000 வரை விற்கின்றனர்.
தமிழக அரசு இந்த படத்தின் மீது பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும், கண்ணில் மண்ணை தூவி விட்டு திரையரங்குகள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். உண்மையில் இது போன்ற பிரச்சனைகளுக்கு நடிகர் விஜய் தான் குரல் கொடுத்திருக்க வேண்டும். ரசிகர்களை கருத்தில் கொண்டு விநியோகஸ்தர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும், திரையரங்கு உரிமையாளர்களிடமும் இது போன்ற அநியாயக் கொள்ளையில் ஈடுபடக்கூடாது என சொல்லி இருக்க வேண்டும்.
நடிகர் விஜய்க்கு தற்போது அரசியல் ஆசை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் முன்னோடியாக இருப்பவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். விஜய், அரசியலுக்கு வருவதற்கு முன் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். எம்ஜிஆர், தன்னுடைய ரசிகர்களிடம் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக கொடுத்த டிக்கெட் வாங்க கூடாது என அறிவித்திருந்தார்.
எம்ஜிஆர் உடைய ரசிகர்களும் அவர் கிழித்த கோட்டை தாண்டாமல் இருந்தார்கள். விஜய் தன்னுடைய படத்திற்கு 3000 வரைக்கும் டிக்கெட் விலை இருப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். டிக்கெட் விஷயத்தை பற்றி பேசினால் தயாரிப்பாளர்களை பகைத்துக் கொள்ள வேண்டியது வரும். அவருடைய சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள். கோடிகளில் நாம் மட்டும் சம்பளம் வாங்கினால் போதும் என நினைத்துவிட்டார் போல விஜய்.