கஸ்தூரிராஜா பிரபல இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். நடிகர் ராஜ்கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பெரும்பாலும் கிராமத்து கதைகளை மையமாகக் கொண்டுதான் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்டாலும் இவர் இயக்கத்தில் வெளியான ஒரு சில படங்களை இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாது.
என் ராசாவின் மனசினிலே: இயக்குனர் கஸ்தூரிராஜா முதன் முதலில் இயக்கிய திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் மீனா நடித்திருந்தனர். இளையராஜா இசையில் வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படம் வெள்ளிவிழா கண்டது. இதன் மூலம் கஸ்தூரிராஜா முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக மாறினார்.
சோலையம்மா: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் சோலையம்மா. இந்த படத்தில் ராகுல் மற்றும் சுகன்யா நடித்திருந்தனர். கஸ்தூரிராஜாவின் இரண்டாவது படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்திருந்தார்.
எட்டுப்பட்டி ராசா: எட்டுப்பட்டி ராசா திரைப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தின் அத்தனை பாடல்களையும் அவர்தான் எழுதி இருந்தார். இதில் பஞ்சுமிட்டாய் என்னும் பாடல் மிகவும் பிரபலமானது. இந்தப் படம் நடிகர் நெப்போலியனுக்கு கோலிவுட் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
என் ஆச ராசாவே: சிவாஜி கணேசன், முரளி, ராதிகா, ரோஜா, சுவலட்சுமி ஆகியோரின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் என் ஆச ராசாவே. இந்த படம் தெரு நடன கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
வீரத்தாலாட்டு: கஸ்தூரிராஜா இயக்கி தயாரித்த திரைப்படம் வீரத்தாலாட்டு. இந்த படத்தில் ராஜ்கிரண், ராதிகா, லட்சுமி, முரளி, ரோஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
துள்ளுவதோ இளமை: கஸ்தூரிராஜா என்ற பெயரில் 2002 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த படத்தில் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் இயக்குனர் செல்வராகவன் திரைக்கதை எழுதியிருந்தார். அவருடைய இரண்டாவது மகன் நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருந்தார்.