இன்றைய தமிழ் சினிமாவில், பார்ட் 2 என்பது ஒரு அடிப்படை போல் மாறிவிட்டது. படம் வெற்றிபெறட்டும், இல்லையென்றாலும் இரண்டாம் பாகம் தயாராகிவிடுகிறது. இயக்குநர்கள், பட பூஜையிலேயே பார்ட் 2 கான கதையை முடிவு செய்து விடுகிறார்கள்.
பாகுபலி, புஷ்பா, அரண்மனை, சிங்கம் போன்ற ஹிட் படங்கள் தொடர்ச்சியாகப் பார்ட் 2, 3 ஆக உருவாகி மெகா ஹிட் ஆனது. ஆனால் அனைத்து பார்ட் 2 படங்களும் வெற்றி பெறவில்லை என்பதை மறக்கக் கூடாது. சில படங்கள் பார்ட் 2-இல் பிளாப் ஆன அனுபவங்களும் உண்டு.
இப்போது ஜெயிலர் 2, சர்தார் 2, வடசென்னை 2, மாஸ்டர் 2 போன்றவை உருவாகி வருகின்றன. பார்ட் 2 என்பது இப்போது சாதாரணமாக மாறி விட்டாலும், ஒரு காலத்தில் இது விசித்திரமான முயற்சியாக இருந்தது. அப்போது தமிழ் சினிமாவில் பார்ட் 2 என்பது சாத்தியமே இல்லாத ஒன்று போலவே இருந்தது.
உலகநாயகன் ஹிட் கொடுத்தாரா?
அந்த நேரத்தில், 1979-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன் திரைப்படம் வெளிவந்து ஹிட் ஆனது. ஜி என் ரங்கராஜன் இயக்கத்தில், ஸ்ரீதேவி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் போன்றோர் நடித்திருந்தனர். கமல் இரட்டை வேடத்தில் நடித்ததில், ஒருவர் பழிவாங்கும் கதையம்சம் மக்களை கவர்ந்தது.
இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 1985-ல் ஜப்பானில் கல்யாணராமன் என்ற பார்ட் 2 படம் வெளிவந்தது. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில், கமல், ராதா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்தனர். இதில் கல்யாணராமன் ஆவியாக வந்து மற்றொரு கமலை காப்பாற்றும் கதை அமைக்கப்பட்டது.
முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அதிக வரவேற்பு பெறவில்லை என்றாலும், இரண்டும் வசூலில் வெற்றி பெற்றன. தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களுக்கு தொடக்கமாக செயல்பட்ட இந்த படங்கள், இன்று உருவாகும் பல தொடர்ச்சிப் படங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. ‘ஜப்பானில் கல்யாணராமன்’ தான் தமிழ் சினிமாவின் பார்ட் 2 புரட்சி ஆரம்பம் என கூறலாம்.