கவுண்டமணி வில்லனாக மிரட்டிய 5 படங்கள்.. இன்றுவரை பிரபலமாக இருக்கும் ‘பத்தவச்சுட்டியே பரட்டை’ வசனம்

தமிழ் சினிமா காமெடி உலகின் முடி சூடா மன்னன் என்றால் அது கவுண்டமணி தான். இன்று அவர் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், அவருடைய காமெடி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நகைச்சுவை மன்னனாக கலக்கிய கவுண்டமணி தன்னுடைய வில்லத்தனத்தாலும் ரசிகர்களை மிரள விட்டார் என்றால் நம்ப முடிகிறதா. இந்த ஐந்து படங்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் படம் பார்ப்பவர்களை அலறவும் விட்டிருக்கிறார் கவுண்ட மணி.

16 வயதினிலே: இயக்குனர் பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படம் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசனை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தது அதேபோல்தான் கவுண்டமணியும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இந்த படத்தில் ரஜினி கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். அவர் உடனே பயணிக்கும் கூத்து என்னும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடித்திருப்பார். இதில் கவுண்டமணி சொல்லும் பக்தவச்சிட்டியே பரட்டை என்னும் வசனம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.

ஞானப்பழம்: இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் மற்றும் நடிகை சுகன்யா நடித்த திரைப்படம் ஞானப்பழம். ஒரு நேர்மையான பத்திரிகையாளராக பாக்யராஜ் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் கவுண்டமணி சுகன்யாவின் அண்ணனாகவும், பாக்யராஜை எதிர்க்கும் வில்லனாகவும் மிரட்டி இருந்தார்.

ஆவாரம் பூ: வினித் மற்றும் நந்தினி நடித்த திரைப்படம் ஆவாரம்பூ. இந்த படத்தில் நாசர் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இருந்தாலும் கவுண்டமணி ஆசாரி என்னும் கதாபாத்திரத்தில் திரைக்கதையில் நடக்கும் மொத்த பிரச்சனைகளுக்கும் காரணமான வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். மேலும் இந்த படத்தில் பயில்வான் ரங்கநாதன் உடன் இவருடைய காட்சிகளும் ரசிக்கும் படி இருக்கும்.

எங்க ஊரு ராசாத்தி: என் எஸ் ராஜேந்திரன் இயக்கத்தில் ராதிகா மற்றும் சுதாகர் சேர்ந்து நடித்த திரைப்படம் எங்க ஊரு ராசாத்தி. இந்த படத்தில் நகைச்சுவை மன்னன் கவுண்டமணி தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி இருப்பார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இதில் கவுண்டமணி நடித்த வில்லன் கேரக்டரும் அந்த அளவு ரசிகர்களிடம் எடுபடவில்லை.

நான் பெத்த மகனே: இயக்குனர் வி சேகர் இயக்கத்தில் நிழல்கள் ரவி, ராதிகா, ஊர்வசி, மனோரமா ஆகியோர் நடித்த திரைப்படம் நான் பெத்த மகனே. இந்த படத்தின் ஆரம்பத்தில் கவுண்டமணியே காமெடியனாக பார்த்தாலும், பணத்திற்காக எதையும் செய்யும் வக்கீலாக தன்னுடைய கொடூர முகத்தையும் காட்டியிருப்பார்.