மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மிக அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தான் தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் இப்படம் உருவாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆவலையும் தூண்டி இருக்கிறது நாவல் ஆசிரியர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த படைப்பு திரைப்படமாக பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதுதான் பலரின் ஆர்வத்துக்கும் காரணம்.
அந்த வகையில் இந்த திரைப்படம் மணிரத்தினத்தின் கனவு படம் என்று சொல்லலாம். ஆனால் இந்த நாவலை படமாக உருவாக்குவதற்கு எம்ஜிஆர் முதல் கமல் வரை பலரும் முயற்சி செய்தனர். ஆனால் அதில் மணிரத்தினம் தான் வெற்றி கண்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இந்த பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுப்பதற்கு நிறைய திட்டங்களை போட்டிருந்தார். அதாவது கமலின் தயாரிப்பில், மணிரத்தினத்தின் இயக்கத்தில், பி சி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார்.
மேலும் சத்யராஜ், பிரபு, நாசர், ஜெயராம், நிழல்கள் ரவி உள்ளிட்ட நடிகர்களையும் அவர் தேர்வு செய்து வைத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அப்போது ரசிகர்களின் கனவு கன்னிகளாக இருந்த குஷ்பூ, மீனா ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படத்தை கமலால் எடுக்க முடியாமல் போனது. தற்போது 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை அப்போதே ஆண்டவர் இரண்டு கோடி செலவில் எடுக்க திட்டமிட்டு இருந்தார். அவருடைய ஆசை நிறைவேறாவிட்டாலும் தற்போது மணிரத்தினத்தின் மூலம் இந்த படம் உருவாகி இருக்கிறது.
அதேபோன்று கமல் அப்போது தேர்ந்தெடுத்த நடிகர்களும் இந்த பொன்னியின் செல்வன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ரசிகர்கள் இந்த சோழர் சாம்ராஜ்யத்தின் வரலாறை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.