படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. இப்படி ரஜினி மட்டுமில்லாது கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, அமிதாப் பச்சனுடன் இணைந்து மொத்தம் 200 படங்களில் நடித்து இருக்கிறார். மாஸ்டர் சுரேஷ் முதன் முதலில் 1985 ஆம் ஆண்டு பாலிவூடில் தான் அறிமுகமானார். அமிதாப் பச்சனுடன் இணைந்து இந்த படத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார். அந்த ஒரு படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு . மலையாளம் படங்களில் அதிகமாக நடித்தார்.
பாக்யராஜ், சரிதா நடித்த மௌன கீதங்கள் படத்தில் இவர்களின் மகனாக மாஸ்டர் சுரேஷ் நடித்திருப்பார். அந்த சின்ன வயதிலேயே அப்படி ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் குழந்தை நட்சத்திரத்திற்காக பல விருதுகளை வாங்கியிருக்கிறார். இந்த மாஸ்டர் சுரேஷ் வேறு யாருமில்லை இப்போது பிரபலமாக இருக்கும் தெலுங்கு இயக்குனர் சூர்ய கிரண் தான். இவர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தன்னுடைய கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். 2005 ஆம் ஆண்டு தெலுங்கில் சத்யம் என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
நாகர்ஜுனா தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். சூர்ய கிரண், பிரபல சின்னத்திரை நடிகை சுஜிதாவின் அண்ணன். சுஜிதாவும் சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இப்போது விஜய் டிவியின் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து கொண்டிருக்கிறார். சமுத்திரம், புன்னகை பூவே, கண்ணுக்குள் நிலவு திரைப்படங்களில் நடித்த காவேரி என்னும் கல்யாணியை இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து ஆகிவிட்டது.

