இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் முதன்முறையாக மல்டி யுனிவர்ஸ் கான்செப்டை கொண்டு வருகிறார் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் லோகேஷ்க்கு முன்பே தமிழ் படங்களில் இயக்குனர்கள் இதே முயற்சியை செய்து இருக்கிறார்கள். தற்போது போல் அந்த காலத்தில் தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளராததால் இந்த முயற்சி வெளியில் தெரியாமல் இருந்திருக்கிறது.
கிழக்கே போகும் ரயில்: இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கிழக்கே போகும் ரயில். இந்த படத்தின் ஒரு காட்சியில் 16 வயதினிலே மயில் மற்றும் சப்பானியின் பெயர் வந்திருக்கும். இந்த படத்திற்கு முன்பு வெளியான 16 வயதினிலே கிளைமாக்ஸ்ஸில் சப்பானி ஜெயிலுக்கு போவது போல் சோகமாக முடித்திருப்பார் பாரதிராஜா. எனவே அதைத் தொடர்ந்து ரிலீசான கிழக்கே போகும் ரயில் படத்தில் மயிலுக்கும் சப்பானிக்கும் திருமணம் ஆனது போல் ரசிகர்களுக்கு தெரிவித்திருப்பார்.
காதல் சடுகுடு: நடிகர் விக்ரம் நடித்த காதல் சடுகுடு திரைப்படத்தில் சின்ன கலைவாணர் விவேக் நிறைய சமூக கருத்துகளை காமெடியின் மூலம் பேசி இருப்பார். அதில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வது போல் காட்சி இருக்கும். அந்த காமெடி சீனில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன கருத்தம்மா திரைப்படத்தின் காட்சிகளை சேர்த்திருப்பார்கள்.
தேவன்: நடிகர் அருண்பாண்டியன், கேப்டன் விஜயகாந்த், நவரச நாயகன் கார்த்திக் ஆகியோர் நடித்த திரைப்படம் தேவன். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக் நடித்த நாடோடி தென்றல் திரைப்படத்தின் காதல் காட்சியை ஞாபகப்படுத்தி இருப்பார் படத்தின் இயக்குனர் அருண் பாண்டியன்.
மன்மதன்: நடிகர் சிம்பு இயக்கி நடித்த திரைப்படம் மன்மதன். இந்தப் படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதில் தம்பியாக வரும் மொட்டை மதனுக்கும், சந்தானத்துக்குமான ஒரு காட்சியில் சந்தானம், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அர்ஜுன் நடித்த வெளியான கிரி படத்தில் வரும் பேக்கரி டீல் காமெடியை சம்பந்தப்படுத்தி பேசி இருப்பார்.
புலி: நடிகர் விஜய், இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்த பேண்டஸி திரைப்படம் தான் புலி. இந்த படத்தின் ஒரு காட்சியில் காமெடி நடிகர் தம்பி ராமையா ஒரு ஆமையை வேட்டையாடுவது போல் இருக்கும். இந்த காட்சியில் இயக்குனர் சிம்பு தேவன் தன்னுடைய முந்தைய படமான இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில் வரும் கரடி காமெடியை ரசிகர்களுக்கு நினைவுபடுத்தி இருப்பார்.