சிம்புவுடன் போட்டி போட தயாரான நடிகர்.. பத்து தலயுடன் வெளியாகும் 2 படங்கள்

சிம்பு தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி சினிமாவில் பட்டையை கிளப்பி வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிக்கு பிறகு இப்போது பத்து தல படத்தில் சிம்பு நடித்து உள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

அண்மையில் பத்துதல படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிம்பு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது பத்து தல படத்துக்கு போட்டியாக இரண்டு படங்கள் வெளியாக உள்ளது.

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் பல வருடங்களாக உருவாகி வரும் விடுதலை படமும் பத்து தல படத்துடன் வெளியாகிறது. காமெடி நடிகராக கலக்கி வந்த சூரி இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்போது சிம்புவுக்கு போட்டியாக சூரியை இறக்கி விட்டுள்ளார் வெற்றிமாறன்.

மேலும் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவான நிலையில் முதல் பாகம் மார்ச் மாதம் வெளியாகிறது. பத்து தல, விடுதலை படங்கள் உடன் நானி நடிப்பில் உருவாகியுள்ள தசரா படமும் வெளியாகிறது. ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் சமுத்திரக்கனி, பிரகாஷ்ராஜ், பூர்ணா மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. இந்த படமும் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இவ்வாறு பத்து தல, விடுதலை, தசரா என மூன்று படங்களும் ஒரே நாட்களில் வெளியாவதால் எந்த படம் அதிக வசூலை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும் சிம்பு படம் தான் வசூல் வேட்டை ஆடும் என அவரது ரசிகர்கள் இப்போது ஆர்ப்பரித்து வருகிறார்கள்.