தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பக்கா ஆக்சன் கதையாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு தற்போது சென்னையில் மீதி காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். படமும் அக்டோபரில் ரிலீஸ் ஆகப்போகிறது.
கடந்த சில வருடங்களாகவே விஜய் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவருடைய அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகிவிடும். வாரிசு திரைப்படம் ஆரம்பித்த பொழுது அடுத்தவர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைகிறார் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியது. ஆனால் தற்போது லியோ முடிவடையும் கட்டத்தில் இருக்கும்போது கூட அவருடைய அடுத்த படம் யாருடன் என்பது இன்றும் வெளிவராமல் இருக்கிறது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் அவருடைய ஆஸ்தான இயக்குனரான அட்லியுடன் படம் பண்ண இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் அட்லி நடிகர் அஜித்திற்கு கதை சொல்லி இருக்கிறார் எனவும் அடுத்து இவர்கள் இருவரும் தான் இணைவார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது கடந்த இரு தினங்களாக விஜய்யின் அடுத்த அப்டேட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தெலுங்கில் கிராக் மற்றும் வீரசிம்மா ரெட்டி திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மல்லி விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறார் எனவும், அவருக்கும் கதை பிடித்துப் போய்விட்டதாகவும், அடுத்து இவர்கள் இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கில் படம் பண்ண இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
விஜய் ஏற்கனவே தெலுங்கு இயக்குனரான வம்சியுடன் இணைந்து பணியாற்றிய வாரிசு திரைப்படம் அவருடைய ரசிகர்களுக்கு எதிர்பார்த்த திருப்தியை கொடுக்கவில்லை. இதனால் தளபதி மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் பணிபுரிய இருக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இருந்தாலும் தங்களின் ஆசையை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய் அடுத்த இயக்குனர் அட்லியுடன் இணைய வேண்டும் என்பதைத்தான் அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும் பிகில் படத்தில் சில காட்சிகளில் வந்து போகும் ராயப்பன் கேரக்டரை வைத்து ஒரு முழு படம் பண்ண வேண்டும் என்பது அவர்களுடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது. விஜய் தன்னுடைய ஆஸ்தான இயக்குனருக்கு பச்சை கொடி காட்டுகிறாரா என்பது விரைவில் தெரியும்.