தற்போது டாப் ஹீரோக்கள் எல்லோருமே இளம் இயக்குனர்களுக்கு தான் வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். ஏனென்றால் இப்போது உள்ள ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் ரசிகர்களை கவரும் விதமாக இவர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள். ஆகையால் தான் இளம் இயக்குனர்கள் தற்போது தமிழ் சினிமாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறார்கள்.
அதுமட்டுமின்றி தற்போது மூன்று இயக்குனர்கள் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளார்களாம். அந்த மூவருமே டாப் ஹீரோக்களான அஜித், விஜய், ரஜினி ஆகியோரின் படத்தை இயக்கியவர்கள் தான். இவர்கள் படம் வசூல் வேட்டையாடி வருவதால் நாமே படம் தயாரிக்கலாம் என்று களத்தில் இறங்க உள்ளனர்.
அந்த வகையில் விக்ரம் படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். அதில் தன்னுடன் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறார். முதலாவதாக லாரன்ஸ் படத்தையும் அடுத்ததாக விக்ரம் படத்தையும் லோகேஷ் தயாரிக்க இருக்கிறார்.
அடுத்ததாக அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச் வினோத் தயாரிப்பாளராக விஸ்வரூபம் எடுக்கிறார். இப்போது அஜித்தின் துணிவு படத்தை வினோத் இயக்கியுள்ளார். இவரும் தனது உதவி இயக்குனரை வைத்து யோகி பாபு நடிப்பில் உருவாகும் படத்தை தயாரிக்க உள்ளாராம்.
இவரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சன் படங்களை தயாரிக்க நிறுவனம் தொடங்கியுள்ளார். அதில் யார் இயக்குனர் மற்றும் நடிகர் என்பது தற்போது வரை உறுதிப்பட தெரியவில்லை.
மிகக் குறுகிய காலத்திலேயே அதிக வளர்ச்சி அடைந்த இந்த மூன்று இயக்குனர்களும் வருகின்ற புது வருடத்தில் இருந்து தயாரிப்பாளராக மாறுவது மட்டுமல்லாமல் தங்களிடம் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.