ஒரே கதையை மையமாக வைத்து பார்ட் 1,பார்ட் 2 என பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகி உள்ளன. இதில் முக்கியமாக அண்மையில் திரையரங்கில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற விக்ரம் திரைப்படத்தை கூறலாம்.
உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி,பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இத்திரைப்படம் 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படத்தின் தொடர்ச்சி கதையை மையமாக வைத்து விக்ரம் திரைப்படம் எடுக்கப்பட்டது.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்தே கதை அமைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே விக்ரம் திரைப்படத்திலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கதை நகரும். தொடர்ந்து விக்ரம் 3, கைதி 2 உள்ளிட்ட படங்கள் வரிசையாக உருவாக உள்ள நிலையில், இதே பாணியில் நாம் அனைவரும் கவனிக்க மறந்த திரைப்படமாக நடிகர் ஆர்யாவின் திரைப்படம் ஒன்று உள்ளது .
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு நடிகர் ஆர்யா,ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மீகாமன் திரைப்படம் முழுக்க முழுக்க போதை பொருள் கடத்தலை மையமாக வைத்தே கதை உருவாகியிருக்கும். இதனிடையே அன்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் ஒரு பேட்டியில் பேசினார்.
அப்போது,போதைப் பொருள் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தற்போது ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள். அப்படி என்றால் நடிகர் ஆர்யாவின் மீகாமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு கைதி, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை பாருங்கள், அத்திரைப்படத்தை அவ்வளவு பிரமாதமாக மகிழ்திருமேனி இயக்கி இருப்பார் என ரவீந்தர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் அத்திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கதாபாத்திரமும் கனகச்சிதமாக பொருந்தியிருக்கும். மீகாமன் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் செதுக்கியிருப்பார். அப்படிப்பட்ட திரைப்படத்தை ஏன் மக்களால் கொண்டாடபடவில்லை என்று தெரியவில்லை என ரவீந்தர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.