திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 4 திரைப்படங்கள்.. வருட கணக்கில் காக்க வைக்கும் மருதநாயகம்

ஒரு சில திரைப்படங்கள் உருவாகப் போகிறது என்று அறிவிப்பு வெளியானாலே எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்து விடும். ஆனால் சில திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சில தடங்கல்கள் காரணமாக பாதியிலேயே தடை பெற்று நின்றுவிடும்.

ஆனால் அந்தத் திரைப்படங்கள் என்றாவது ஒருநாள் ஆரம்பிக்கப்பட்டு ரிலீசாகி விடாதா என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருக்கும். அந்த வகையில் திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய நான்கு திரைப்படங்கள் பற்றி இங்கு காண்போம்.

மருதநாயகம் இப்போது வரை தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரே திரைப்படம் என்றால் அது இந்த படமாக தான் இருக்க முடியும். பல வருடங்களுக்கு முன்பு மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல பிரபலங்கள் முன்னிலையில் இந்த படம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

வரலாற்று கதையான இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்து, நடிக்க இருந்தார். ஆனால் இடையில் ஏற்பட்ட பண பிரச்சனையின் காரணமாக இந்த திரைப்படம் பாதியிலேயே நின்று போனது. மேலும் இந்த படம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களை மிகுந்த வியப்படையச் செய்தது.

இந்தப் படம் நிறுத்தப்பட்டு பல வருடங்கள் கடந்த பின்னும் ரசிகர்கள் இதன் தாக்கத்திலிருந்து வெளிவராமல் தவித்து வருகின்றனர். இப்போதும் கூட கமலிடம் இந்த படத்தை ஆரம்பிக்க அவர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

ராணா கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், வடிவேலு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது. வரலாற்று கதையான இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் போர் வீரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் இந்த படம் ஆரம்பிக்க இருந்த சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது அதன் காரணமாக நிறுத்தப்பட்ட இந்த திரைப்படம் பல வருடங்கள் கழிந்த நிலையில் மீண்டும் தொடங்கப்படாமல் இருக்கிறது.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி வைகைப்புயல் வடிவேலுவின் நடிப்பில் வெளிவந்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய அளவில் வசூல் லாபம் பார்த்த அப்படத்தை இயக்கிய சிம்பு தேவன் மீண்டும் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படத்தை இயக்க இருந்தார்.

இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து அந்த படத்தை தயாரிக்க இருந்தனர். ஆனால் அப்போது வடிவேலுவுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இந்த திரைப்படம் கைவிடப்பட்டது.

சபாஷ் நாயுடு கடந்த 2017 ஆம் ஆண்டில் கமல், ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படம் உருவாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. தசாவதாரம் திரைப்படத்தில் பல்ராம் நாயுடு என்ற கேரக்டர் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. அதை மையப்படுத்தி எடுக்க இருந்த இந்த சபாஷ் நாயுடு கைவிடப்பட்டதில் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.