அடுத்த மாதம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள 5 படங்கள்.. சத்திய சோதனையாக வெளிவரும் பிரேம்ஜியின் படம்

July 2023 Released Movies: இன்றுடன் இந்த மாதம் நிறைவடைவதால் அடுத்த மாதத்தில் எந்தெந்த படம் ரிலீஸ் ஆகிறது என சினிமா பிரியர்கள் இப்போதிலிருந்து இணையத்தில் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் ஜூலை மாதம் வெளியாகும் 5 படங்களை பற்றி பார்ப்போம். அதிலும் பிரேம்ஜியின் சத்திய சோதனை திரைப்படம் நமக்கு எல்லாம் சத்திய சோதனையாகவே அமையப்போகிறது. அவரை ஒரு காமெடி நடிகராகவே பார்க்க முடியாது, அவர் ஹீரோவாக சத்திய சோதனை படத்தில் நடிக்கிறார். அந்த படமும் ஜூலை மாதம் தான் ரிலீஸ் ஆகிறது.

பம்பர்: வேதா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எம். சிவகுமார் இயக்கத்தில் நடிகர் வெற்றி கதாநாயகனாகவும், பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் தான் பம்பர். இது ஜிபி முத்து, கலக்கப்போவது யாரு புகழ் தங்கதுரை இருவரும் காமெடி நடிகர்களாக நடித்துள்ளனர். இந்தப் படம் கேரளா லாட்டரி சீட் மற்றும் அதன் பரிசு தொகையையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் ஜூலை 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ், தெலுங்கில் வருகிற ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படம் தான் மாவீரன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து பாடிய வண்ணாரப்பேட்டையில என்ற பெப்பி சாங் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இவர்களுடன் இந்த படத்தில் மிஸ்கின், சுனில், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா வரும் ஜூலை 2ம் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல ரிலீஸ் தேதி நெருங்குவதால் படத்தின் ப்ரோமோஷன் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

கொலை: இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் ‘கொலை’ திரைப்படம் வரும் ஜூலை 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். படத்திற்கு சிவக்குமார் விஜயன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள கொலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நீண்ட நாட்களாகவே தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இதனால் மிகுந்த ஏமாற்றத்துடன் இருக்கும் ரசிகர்களுக்கு ஜூலை மாதத்தில்வெளியாக இருக்கும் கொலை படத்தை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் வசனங்கள் என அனைவரும் இந்த படத்தின் டீசரைப் பார்த்து ஆஹா ஓஹோன்னு புகழ்ந்த நிலையில் படம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சத்திய சோதனை: ஒரு கிடாரியின் கருணை மனு என்ற படத்தை இயக்கிய சுரேஷ் சக்கையா இயக்கத்தில் பிரேம்ஜி கதாநாயகனாகவும் ஸ்வயம் சித்தா, பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா உள்ளிட்டோர் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் படம் தான் சத்திய சோதனை. இந்தப் படத்தை வரும் ஜூலை 21ஆம் தேதி ரிலீஸ் செய்கின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க அருப்புக்கோட்டை பின்னணியில் நடக்கும் கதை களத்தைக் கொண்டது. சிறு நகரத்தில் காவல் நிலையம், நீதிமன்றம் எப்படி இயங்குகிறது என்பதை இந்த படத்தில் நகைச்சுவையுடன் காட்டி இருக்கின்றனராம்.

மார்க் ஆண்டனி: ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்திருக்கும் படம் தான் மார்க் ஆண்டனி. இதில் இருவரும் இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் ரித்து வர்மா, சுனில், செல்வராகவன், அபிநயா, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போன நிலையில், வரும் ஜூலை 28ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.