நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக கொண்டாடப்படும் 5 வில்லன்கள்.. தெய்வமாக கை கொடுத்த அருந்ததி பசுபதி

5 Real Life Heroes: சினிமா துறையை பொறுத்த வரைக்கும் மக்களிடையே அதிக வெறுப்பை சம்பாதிப்பவர்கள் வில்லன் கேரக்டரில் நடிப்பவர்கள் தான். ஒரு காலத்தில் டெண்டு கொட்டாயில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது எம்ஜிஆர், நம்பியார் ஒரு அடி அடித்துவிட்டார் என்பதற்காக ஸ்கிரீனையே கிழித்து எறிந்த சம்பவம் எல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படி தங்களுடைய நடிப்பில் மிரட்டே, நிஜ வாழ்வில் ஹீரோக்களாக வாழும் ஐந்து வில்லன்களை பற்றி பார்க்கலாம்.

நம்பியார்: நம்பியாரை பொறுத்த வரைக்கும் அவர் நடிக்கும் எல்லா படங்களிலும் புகை மற்றும் மது அருந்துவது, பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது போல் தான் கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் நம்பியாருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. அதோடு வருடம் தவறாமல் சபரிமலைக்கு மாலை போட்டு விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு செல்வார். இவர் பெரிய குருசாமி ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிஷோர்: பொல்லாதவன் படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தவர் தான் கிஷோர். சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் கூட ஆதித்த கரிகாலனின் மரணத்திற்கு துருப்புச் சீட்டாக இருக்கும் ரவி தாசனின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரையில் மிரட்டினாலும் கிஷோர் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பெங்களூருவில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கடைசி காலத்தில் முழு நேர விவசாயியாக மாற வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை.

தீனா: புதுப்பேட்டை, தலைநகரம், தெறி போன்ற படங்களில் தன்னுடைய வில்லத்தனத்தில் மிரட்டியவர் தான் சாய் தீனா. இவருடைய தோற்றம் தான் கரடு முரடாக இருக்குமே தவிர உண்மையிலேயே கடவுளுக்கு இணையான சேவையை செய்து வருகிறார். தீனா லட்சத்தில் சம்பாதிக்கவில்லை என்றாலும் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை ஏழை எளியவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு உணவு வழங்குவது, மருத்துவ செலவு போன்றவற்றை செய்து வருகிறார்.

சோனு சூட்: அம்மாடி, அழகு பொம்மாயி என்னும் வசனத்தின் மூலம் 90ஸ் கிட்ஸ்களை மிரட்டியவர் தான் சோனு சூட். சந்திரமுகி மற்றும் அருந்ததி போன்ற படங்களில் இவர் வில்லத்தனத்தில் மிரட்டி இருந்தாலும் கொரோனா காலத்தில் தான் இவருக்குள் இருக்கும் ஹீரோ நிறைய பேருக்கு தெரிய வந்தது. ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக வசதி இல்லாத மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தது, விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கிக் கொடுப்பது போன்ற நிறைய சமூக சேவைகளை சோனு சூட் செய்து வந்தார்.

பிரகாஷ் ராஜ்: 90ஸ் கிட்ஸ்களை தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி எடுத்தவர் பிரகாஷ்ராஜ். அவருக்கு சட்டையை கிழித்துக்கொண்டு ஆக்ரோஷமாக எல்லாம் சண்டை போடத் தெரியாது. தன்னுடைய குரலை காட்சிக்கு ஏற்ற மாதிரி மாற்றிப் பேசியே அதர விடுபவர். வில்லனாக பல படங்களில் மிரட்டிய இவர் துணிந்து அரசியல் களம் கண்டார். அது மட்டும் இல்லாமல் இன்று வரை நாட்டில் நடக்கும் நிறைய பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.