தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோக்களை ஒப்பிடும்போது ஹீரோயின்களின் ஆக்டிவ் காலம் என்பது கொஞ்சம் கம்மியாக தான் இருக்கும். அதுவும் 80 மற்றும் 90களில் கொடி கட்டி பறந்த பல ஹீரோயின்கள் குறுகிய காலத்திலேயே சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்கள். திருமணம், பிசினஸ் என இந்த நடிகைகள் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இதில் ஒரு சில நடிகைகள் என்ன ஆனார்கள், எங்கிருக்கிறார்கள் என்று கூட தெரியாமல் போய்விட்டது.
அப்படி தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் பல ஹிட் படங்களில் நடித்த ஹீரோயின் ஒருவர் சினிமாவை விட்டு 20 வருடமாக ஒதுங்கி இருக்கிறார். அதுவும் சில வருடங்களுக்கு முன்னால் வரைக்கும் இவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பது கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது. இவர் கேன்சரில் இறந்து விட்டதாக கூட அப்போது வதந்திகளும் பரவின. அதன் பின்னர் மீடியா முன்வந்த அந்த நடிகையை பார்த்து அதிர்ச்சி அடையாத ஆட்களே இல்லை என்று சொல்லலாம்.
80ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை கனகா. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் இவர். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் மற்றும் கனகா நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழகம் எங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இன்று வரை இவர் கரகாட்டக்காரன் கனகாவாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார்.
கோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர் திடீரென்று சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். இதற்கு காரணம் அவருடைய தாய் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மரணம் தான். அதிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கனகா. மேலும் இவருக்கு மூன்று வயது இருக்கும் போதே தந்தையும் இவர்களை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார். ஏற்கனவே அந்த சூழலும் இவருக்கு ஒரு மன அழுத்தமாக தான் இருந்திருக்கிறது.
மேலும் இவர் கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் 15 நாட்களிலேயே இவரை விட்டு விலகி விட்டதாகவும் கூட நடிகை கனகா பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். 20 வருடமாக என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்த கனகா மீடியா முன் வந்தபோது அவர் முற்றிலும் மனநிலை பாதிக்கப்பட்டவராகவே காணப்பட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அன்றைய காலகட்டத்தில் கனகாவுக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்தது. குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வெற்றியை அடைந்த கனகா தனிமையின் காரணமாக இப்படி ஆனது என்பது சினிமா ரசிகர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பிரபலங்களுக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாகவே இருக்கிறது. சிறுவயதிலிருந்தே தான் சந்தித்த இழப்புகள் இவரை இந்த நிலைமைக்கு தள்ளி இருக்கிறது.