நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். ரஜினி நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு எடுக்க முடியாமல் போன திரைப்படம் பற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்பு அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து ராணா என்ற வரலாற்று திரைப்படத்தை எடுக்க முயற்சித்தார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ரஜினியுடன் இணைந்து தீபிகா படுகோன், வடிவேலு, சோனு சூட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அந்த படத்தில் நடிக்க இருந்தனர்.
ஆனால் அந்த சமயத்தில் ரஜினிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உருவானது. அதனால் ராணா திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அதன் பிறகு ரஜினியும் உடல் நலம் தேறி வர சில காலதாமதம் ஆனது.
ஆனாலும் அப்படம் இப்போது வரை ஆரம்பிக்க முடியாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார் ராணா திரைப்படத்தை மீண்டும் ஆரம்பிப்பது பற்றி விளக்கி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, இந்தப் படத்தை மீண்டும் தொடங்குவதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்.
ஆனால் இப்படத்தில் ரஜினி நடிக்க முடியாத நிலை ஏற்பட்டால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க என் மனதில் மற்றொரு நடிகரை முடிவு செய்து வைத்திருக்கிறேன். ஏனென்றால் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தான் மிக பொருத்தமாக இருப்பார் என்று கூறி விஜய்யின் பெயரை சொல்லி இருக்கிறார்.
இந்த செய்தி தற்போது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஏனென்றால் சமீப காலமாக வெளிவரும் வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் கேஎஸ் ரவிக்குமார் மீண்டும் ராணா படத்தை துவங்க இருப்பதற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் கே.எஸ். ரவிக்குமார் இது குறித்து விஜய் தரப்புக்கு தூது விட்டு இருக்கிறாராம். ஆனால் அங்கிருந்து இன்னும் எந்த விதமான பதிலும் வரவில்லை. விரைவில் சாதகமான ஒரு பதில் விஜய்யிடம் இருந்து வரும் என்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.