95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இந்த விழாவில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஒரிஜினல் பாடல்கள் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. மேலும் ஆவண படங்கள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ‘த எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ என்னும் குறும்படம் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.
இந்தியா இந்த இரண்டு விருதுகளை தட்டி சென்றதற்கு ஒட்டு மொத்த ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு ஹாலிவுட் திரைப்படமும் உலக அளவில் அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இதற்கு காரணம் அந்தப் படம் ஒட்டுமொத்தமாக ஏழு ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றிருக்கிறது.
டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் என்பவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் எவரிதிங் எவ்ரிவர் அட் ஒன்ஸ். இந்த படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் என்னும் பிரிவுகளில் ஏழு விருதுகளை வாங்கியிருக்கிறது.