கவினின் நடிப்பில் வெளியாகி உள்ள டாடா திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்பா, மகன் பாசம், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் இப்படத்தின் வெற்றியை சமீபத்தில் பட குழு விமரிசையாக கொண்டாடி இருக்கிறது.
அப்போது பேசிய கவின் இந்த திரைப்படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதிலும் இதற்காக 12 வருடம் உழைத்ததாகவும் தன்னுடைய மிகப்பெரிய கனவு இது என்றும் தெரிவித்து இருந்தார். மேலும் இப்படி ஒரு வெற்றியை தனக்கு கொடுத்த அனைவருக்கும் நன்றி என நெகிழ்ந்து போய் கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய கவின் இந்த டாடா திரைப்படத்தின் வெற்றியை தன்னுடைய உயிர் நண்பன் மணிகண்டனுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார். தற்போது அவருடைய நண்பன் உயிரோடு இல்லை என்றும் எங்கிருந்தாலும் இந்த வெற்றியை அவர் பார்த்துக் கொண்டிருப்பார் என்றும் கூறிய கவின் மேடையிலேயே கண்கலங்கினார்.
அது மட்டுமல்லாமல் தன்னை திரையில் பார்க்கும் ஒவ்வொரு நொடியையும் விசில் அடித்து கொண்டாடிய நண்பன் குறித்து அவர் பேசியது பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்தது. இப்படி மிகவும் உருக்கமாக கவின் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறுவதோடு அடுத்தடுத்த நிலைக்கு அவர் உயர வேண்டும் என வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த டாடா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஊர் குருவி படத்தில் நடித்து வரும் கவினுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் இவர் சமீபத்தில் உலகநாயகனையும் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது இவர் கமலின் தயாரிப்பில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் மூலம் கமலுக்கு அறிமுகமான கவின் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.
மேலும் பிக் பாஸில் கலந்து கொண்ட திறமையான போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை கமல் தொடர்ந்து செய்து வருகிறார். அதன் காரணமாகவே அவர் கவினை தன் தயாரிப்பில் நடிப்பதற்கு தேர்ந்தெடுத்துள்ளார். இதற்கு முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர், சிவானி ஆகியோருக்கு கமல் வாய்ப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி வெற்றியை நோக்கி முன்னேறும் கவினை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.