தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் சிவகுமார். 1965இல் தன்னுடைய சினிமா பயணத்தை இவர் தொடங்கினார். துணை கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம், வில்லன், ஹீரோ என தான் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர் இவர். மேலும் இவர் ஒரு சிறந்த ஓவியரும் ஆவார். தமிழ் சினிமாவில் இவருக்கு கந்தன் கருணை திரைப்படம் ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது.
கோலிவுட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களான மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கோலோச்சி கொண்டிருந்த சமயத்தில் வளர்ந்து வரும் ஹீரோவாக அறிமுகமானவர்தான் சிவகுமார். அவர்களுடைய படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து படிப்படியாக சினிமாவில் முன்னேறினார். அதன் பின்னர் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உடனும் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், கார்த்திக், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளியான சிந்து பைரவி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, அக்னி சாட்சி போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தன. சினிமாவில் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் சிவகுமாரால் வெற்றி ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
இவர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது துணை கதாபாத்திரங்களில் நடித்த கமல் மற்றும் ரஜினி இன்று மிகப்பெரிய அளவில் வெற்றி கண்டிருக்கிறார்கள். சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகுமார் தன்னுடைய சினிமா பயணத்தை பற்றியும், சின்னத்திரை பயணத்தை பற்றியும் ரொம்பவும் வெளிப்படையாக பேசினார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை தொடங்கினார். ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்த சித்தி என்னும் தொடரில் இவர் நடித்தார். இந்த நாடகம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது. அதைப் பற்றி பேசிய சிவகுமார் சின்னத்திரைக்கு வந்த பிறகுதான் நான் பணக்காரனாக மாறினேன் என்று சொல்லி இருக்கிறார்.
சினிமாவில் தன்னுடைய 125 வது திரைப்படத்தில் தான் 5 லட்சம் சம்பளம் வாங்கினாராம் . ஆனால் சித்தி மற்றும் அண்ணாமலை போன்ற தொடர்களில் நடித்த போது மாதம் ஒரு லட்சம் சம்பளமாக வாங்கி இருக்கிறார். மேலும் அப்போதுதான் சொந்தமாக புது கார் கூட சிவகுமார் வாங்கினாராம். சினிமாவை விட சின்னத்திரை தான் தன்னை மேன்மை ஆகியது என்று இவர் சொல்லி இருக்கிறார்.