Tamizhaga Vetri Kazhagam: நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த விஜய் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அவரையும் நோட்டமிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக அரசியல்வாதிகளுக்கு தான் தூக்கம் வராத அளவுக்கு விஜய் பண்ணினார் என்று பார்த்தால், அடுத்த ஸ்கெட்ச் போட்டு இருப்பது கேரளா அரசியலுக்கு என்று சொல்கிறார்கள்.
விஜய்க்கு கேரள மாநிலத்தில் அதிகமான ரசிகர்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சினிமாவுக்கு இந்த விஷயம் ஓகே தான். அரசியல் என்று வந்துவிட்டால் கேரளாவில் எப்படி விஜய்க்கு ஆதரவு கிடைக்கும் என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்கும் எழுந்து இருக்கிறது. இந்த படபடப்புக்கு முக்கிய காரணம் இன்று நடந்த ஆலோசனை கூட்டம் தான்.
அவசரமாக நடந்த ஆலோசனைக் கூட்டம்
சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய ஆபீசில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளாவின் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். கேரளாவை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அப்போது விஜய் கேரளாவிலும் கட்சியை தொடங்க இருக்கிறாரா என்று பல மீடியாக்களும் பேசி வருகிறது.
தமிழக வெற்றி கழகம் எப்படி கேரளாவில் அரசியல் செய்ய முடியும், ஒரு வேலை கேரள வெற்றிகழகம் என்று புது கட்சி ஆரம்பிப்பாரோ என வழக்கம் போல இணையதள வாசிகள் தங்களுடைய காமெடி சென்சை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். உண்மையில் விஜய் இந்த ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
எத்தனை வருடங்களாக தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த தமிழக ரசிகர்கள் மற்றும் தன்னுடைய பாதையில் தன்னை இணைத்துக் கொண்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்காக அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து விட்டார். தன்னுடைய ரசிகனையே கட்சியின் தொண்டனாகவும், கட்சியின் நிர்வாகியாகவும் ஆக்கி இருக்கிறார். ஒரு வேலை விஜய் வெற்றிவாகை சூடும்போது இவர்கள் அத்தனை பேரும் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
தமிழகத்தைப் போலவே கேரளா ரசிகர்களும் விஜய்க்கு இதுவரை அமோக ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். தன்னுடைய 69ஆவது படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்திருக்கிறார் விஜய். இத்தனை வருடங்களாக தன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த கேரள ரசிகர்களுக்கு சினிமாவை விட்டு விலகும் முன் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை செய்ய வேண்டும் என அவர் முடிவெடுத்து இருக்கிறார். இதற்காகத்தான் அந்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று இருக்கிறது.