நடிகர் அஜித் மற்ற நடிகர்களை காட்டிலும் பல விஷயங்களை வித்தியாசமாக நடந்துகொள்பவர். உதாரணமாக எந்த ஒரு சினிமா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ள விரும்பமாட்டார், ஏன் அவரது படங்களின் ப்ரோமோஷனுக்கு கூட பங்கேற்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் விருது கொடுத்தால் கூட அதை வாங்க அஜித் வரவேமாட்டார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் செய்து வரும் விஷயத்தை அஜித் ஒருபோதும் செய்யாமல் உள்ளார். பொதுவாக நடிகர்கள் தனது சம்பாத்தியத்தை மென்மேலும் அதிகப்படுத்தும் விதமாக பல தொழில்களை செய்து வருகின்றனர். அதிலும் உலகநாயகன் கமலஹாசன் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே போட்டு லாபமோ, நஷ்டமோ என அதன் மூலமாக தொழில் செய்து வருகிறார்.
மேலும் நடிகர்களான விஜய், ரஜினிகாந்த், கமலஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ், ஜீவா, சூர்யா உள்ளிட்டோரும் தங்களது சம்பாத்தியத்தை சினிமாவிலேயே போட்டு வருமானத்தை அதிகப்படுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் அஜித், இந்த ஒரு விஷயத்தில் விதிவிலக்காக உள்ளார். அஜித் படங்களில் நடிப்பதை தொழிலாக பார்த்து வருபவர். அதிலும் தன் மீது பிரியம் வைத்த ரசிகர்களுக்காக மட்டுமே அஜித் சினிமாவில் படங்களை தொடர்ந்து நடிப்பதாக கூறியவர்.
மேலும், ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டால் அதற்கான சம்பளத்தை வாங்கிக்கொண்டு தனது அடுத்த வேலைகளை செய்வார் அஜித். இந்நிலையில் மற்ற நடிகர்களை போல சொந்தமாக இன்றுவரை அஜித் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலமாக ஒருபோதும் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அஜித்துக்கு தோன்றியதே இல்லை எனலாம்.
அந்தக் காலத்து நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் ரஜினிகாந்த், கமல், சிவகார்த்திகேயன் வரை பெரும்பாலான நடிகர்கள் தங்களது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளனர். இதில், ரஜினிகாந்த் படங்களை தயாரித்து நஷ்டமடைந்த நிலையில், அதை அப்படியே இழுத்து மூடிவிட்டார். அதேபோல கமலஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்கள் நஷ்டமானாலும், கடன் கட்டியாவது தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த அக்கப்போறெல்லாம் வேண்டாமென நினைத்து தான் நடிகர் அஜித், தற்போது வரை தயாரிப்பு நிறுவனத்தை தொடங்காமல் உள்ளார். மேலும் அஜித்தை பிழைக்க தெரியாதவர் என்று கூட பலரும் கூறினாலும், அதையெல்லாம் சற்றுக்கூட கண்டுக்காமல், தான் உண்டு தன் வேலை உண்டு என தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக உள்ளார்.