பீஸ்ட் வெற்றியா, தோல்வியா.? நெல்சனிடம் விஜய் கூறிய விளக்கம்.. மறுபடியும் இந்த கூட்டணி தொடருமா.?

Director Nelson Dilipkumar: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் நேற்று முன்தினம் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ரிலீஸ் ஆன இரண்டே நாட்களில் 150 கோடியை  தொட்டதால் ஜெயிலர் படக்குழுவினர் மகிழ்ச்சியில்  திளைத்துள்ளனர்.

அதிலும் நெல்சனை பிடிக்கவே முடியவில்லை, அந்த அளவிற்கு ஜெயிலர் பட வெற்றியால் பூரிப்புடன் இருக்கிறார். இருப்பினும் சில பேட்டிகளில் பீஸ்ட் படத்தைக் குறித்த சர்ச்சைக்குரிய கேள்விகளை நெல்சன் இடம் கேட்கின்றனர். அதற்கு  அவர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளது தளபதி ரசிகர்களை வியந்து பார்க்க வைத்துள்ளது.

இதற்கு முன்பு நெல்சன்- விஜய் கூட்டணியில் வெளியான பீஸ்ட் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தாலும் கலவையான  விமர்சனங்களை பெற்றது. இதனால் அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் பட வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் சூப்பர் ஸ்டார் அவர் மீது வைத்த நம்பிக்கையால் அந்த படத்தை கொடுத்து விட்டார்.

இருப்பினும் ரஜினியுடன் ஒர்க் அவுட் ஆனது, விஜய்யுடன் வொர்க் அவுட் ஆகவில்லையா? என்று பலரும் நெல்சனை கேலி கிண்டல் செய்கின்றனர், இதற்கெல்லாம் இப்போது அவர் பதில் அளித்துள்ளார். பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருந்த சமயத்தில் விஜய், நெல்சனிடம் ரொம்பவே எதார்த்தமாக பேசி உள்ளார். 

படம் துவங்கும் போது என்ன பேசினோமோ அதை சிறப்பாக செய்து இருக்கிறீர்கள். ஆனால் அந்த படம் சிலருக்கு பிடித்தது, சிலருக்கு பிடிக்காமல் போனது என்று அந்த சமயத்தில் விஜய் நெல்சனுக்கு விளக்கம் அளித்து அவரை சமாதானப்படுத்தினாராம். ரசிகர்களிடம் வரும்  எதிர்மறையான விமர்சனங்களை எல்லாம் வைத்து நெல்சன் மீது விஜய் கொஞ்சம் கூட  வருத்தம் காட்டவில்லை.

அவரைப் பொறுத்தவரை பீஸ்ட் படத்தை வெற்றி படமாகவே தான் பார்த்தார். மறுபடியும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை கண்டிப்பாக கொடுப்போம் என்று  தளபதியுடன் திரும்பவும் கூட்டணி போடுவதை மறைமுகமாக நெல்சன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல முடிந்து போன குப்பையை மறுபடியும் கிளற வேண்டாம் என்று பீஸ்ட் படத்தைக் குறித்து எழும் தொடர் கேள்விகளுக்கு நெத்தியடி பதிலளித்தார்.