சினிமாவை பொறுத்தவரையில் ஓவர் நைட்டில் புகழின் உச்சிக்குச் சென்ற ஒருவர் சொடக்கு போடும் நேரத்திற்குள் சரிந்து போன சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனாலும் இந்த பணத்தாசை யாரை தான் விட்டது. அப்படித்தான் ஒரே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் ஒருவர் அடுத்தடுத்த படங்களால் உச்சாணி கொம்புக்கு சென்றார்.
ஆனால் இப்போது அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். இயக்குனர் பாலாவின் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர்தான் கஞ்சா கருப்பு. அந்தப் படத்தை தொடர்ந்து ராம், சுப்ரமணியபுரம், நாடோடிகள், பருத்திவீரன் ஆகிய திரைப்படங்களின் மூலம் முன்னணி காமெடியனாக வலம் வந்தார்.
அதிலும் அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்த கஞ்சா கருப்புக்கு திடீரென தயாரிப்பாளராகும் ஆசை வந்திருக்கிறது. நடிகராக நடித்து சம்பாதிப்பதை விட தயாரிப்பாளராக அதிகமாக கல்லாகட்டி விடலாம் என்று அவர் தப்பு கணக்கு போட்டு விட்டார்.
அந்த வகையில் அவர் வேல்முருகன் போர்வெல் என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதற்கு கஞ்சா கருப்பு மிகவும் சிரமப்பட்டார். சொந்த வீடு, நிலம் என அனைத்தையும் அடமானம் வைத்து எப்படியோ இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்தார்.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் போகாததால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. போட்ட பணத்தில் பாதியைக் கூட அந்த படம் வசூலிக்கவில்லை. இதனால் நொடிந்து போன கஞ்சா கருப்பு எப்படியாவது நடித்து முன்னேறி விடலாம் என நினைத்தார். ஆனால் புதுப்புது நடிகர்களின் வரவால் அவருக்கான வாய்ப்பு குறைவாகத்தான் கிடைத்தது.
இருப்பினும் அவர் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு நடிக்க ஆரம்பித்தார். அதேபோன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். ஆனால் சில வாரங்களிலேயே இவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு கஞ்சா கருப்பு சில திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.