Dhanush D50: நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சுற்றி நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பதால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக இது இருக்கிறது.
கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதில் அவருடைய ஐம்பதாவது படத்தை அவரே இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகிவிட்டன. தனுஷின் 51வது படம் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷின் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார்.
இந்த படங்கள் மட்டுமில்லாது தனக்கு பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் அத்ராங்கீ ரே என்ற இரண்டு படங்களை கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணைகிறார் தனுஷ். இந்த படத்தின் கதை டிஸ்கஷனுக்காக தனுஷ் சமீபத்தில் மும்பை சென்று வந்தார். இந்த நிலையில் தற்போது தனுஷின் ஐம்பதாவது படத்தின் அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் தற்போது மல்டி ஸ்டார் படங்கள் தான் பயங்கர ட்ரெண்டில் இருக்கிறது. முன்னணி ஹீரோக்கள் கூட தங்களுக்கு இணையாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் மற்றும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் வரை வைத்து படம் எடுத்து வருகிறார்கள். தற்போது இந்த லிஸ்டில் நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமும் இணைந்திருக்கிறது. இந்தப் படமும் மல்டி ஸ்டார் கான்செப்டில் உருவாக இருக்கிறது.
தனுஷின் ஐம்பதாவது படத்தில் அவருடைய தம்பி கேரக்டரில் நடிக்க இருப்பது நடிகர் காளிதாஸ் ஜெயராம். இவருக்கு ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. இவர் நடித்த பாவ கதைகள் என்னும் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்திலும் இவர் நடித்திருந்தார்.
தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் வகையில் அமைந்திருப்பது தான் தனுஷின் அண்ணன் கேரக்டர் பற்றிய அப்டேட். இந்த படத்தில் தனுஷுக்கு அண்ணனாக நடிக்க இருப்பது எஸ் ஜே சூர்யா. தனுஷ் மற்றும் எஸ் ஜே சூர்யா காம்போவில் இந்தப் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.