அடுத்தடுத்து தோல்வி படங்கள்.. லெஜெண்ட் அண்ணாச்சியை வளைத்துப் போட நினைக்கும் சுந்தர்.சி

இயக்குனர் சுந்தர் சி முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், வின்னர் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். சில வருடங்கள் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சுந்தர் சி மீண்டும் அரண்மனை, கலகலப்பு போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் சுந்தர் சிக்கு இது இப்போது போறாத காலமாகிவிட்டது.

அவர் சமீபத்தில் இயக்கிய அரண்மனை 2, கலகலப்பு 2, காபி வித் காதல் போன்ற படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இவருடைய ஹிட் பார்முலா சமீபத்தில் ரிலீசான காபி வித் காதல் படத்தில் செல்லுபடியாகவில்லை. இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இயக்குனர் சமீபத்தில் லெஜெண்ட் அண்ணாச்சியை சந்தித்து பேசியிருக்கிறார்.

சுந்தர் சி அடுத்து சங்கமித்ரா என்னும் படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். சங்கமித்ரா படம் 18ஆம் நூற்றாண்டில் நடப்பதுபோல் எடுக்கப்படும் புனைவுக் கதையாகும். இந்த படத்தை எடுக்க சுந்தர் சி கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக போராடி வருகின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்போது இவர் அண்ணாச்சியை சந்தித்து இருப்பது சினிமா வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அதாவது சங்கமித்ரா படம் வரலாற்று திரைப்படம் என்பதால் அந்த படம் எடுக்க அதிக பணம் செலவாகும். ஏற்கனவே தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிப்பதாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் பண தேவைக்காக இவர் அண்ணாச்சியை சந்திருப்பாரோ என சந்தேகம் எழுந்துள்ளது.

சங்கமித்ரா படத்தில் அண்ணாச்சியை சுந்தர் சி நடிக்க வைக்கப்போகிறார் என்ற தகவலும் வெளிவருகிறது. ஏற்கனவே சங்கமித்ராவில் ஜெயம் ரவி, ஆர்யா இருக்கும் போது லெஜெண்ட் சரவணாவிற்கு இந்த படத்தில் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுப்பார், அது எந்த அளவுக்கு ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று தெரியவில்லை.

லெஜெண்ட் படத்திற்கு பிறகு அண்ணாச்சியும் அடுத்த படத்திற்கு கதை கேட்டு கொண்டிருக்கிறார். அண்ணாச்சியை வைத்து சுந்தர் சி முழு நீள நகைச்சுவை படமும் எடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது. எப்படி இருந்தாலும் இந்த மூன்று காரணங்களில் ஏதோ ஒன்றுக்கு தான் சுந்தர் சி அண்ணாச்சியை சந்தித்து இருக்கிறார். இதுபற்றிய அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.