18 மொழியில் தயாராகும் ஜெயம் ரவி படம்.. பொன்னியின் செல்வனுக்கு பிறகு பிரம்மாண்ட படத்தில் இணைகிறார்

நடிகர் ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. கடைசியாக அவர் கொடுத்த சூப்பர் ஹிட் படம் என்றால் அது அவருடைய அண்ணன் இயக்கத்தில் நடித்து வெளியான தனி ஒருவன் திரைப்படம் தான். அதன் பின்னர் ஜெயம் ரவி எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுத்து விட வேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்.

அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் ஜெயம் ரவிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் பொன்னியின் செல்வன். அதுவும் அந்த கதையின் மைய கதாபாத்திரமான ராஜ ராஜ சோழனின் கேரக்டரை எடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. வசூலிலும் ஜெயித்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து நல்ல பட வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களே சந்தித்தது. மேலும் இந்த படம் ரசிகர்களின் கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை தான் பெரிய அளவில் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடைய 32 ஆவது படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இருக்கிறார். படத்தின் இயக்குனர் யார் என்பது கூடிய விரைவில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை மொத்தம் 18 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விட பெரிய அளவில் இதை கொண்டு செல்ல வேண்டும் என திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த கோமாளி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ரவி இந்த நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கிறார். படத்தின் அப்டேட் கூடிய விரைவில் வெளியாக வாய்ப்பிருக்கிறது.