கமல் தற்போது நடிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். அவர் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக இருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கமல், ஜோதிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் திரில்லர் பாணியில் வெளிவந்த அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் கமல் ராகவன் என்னும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.
24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடியை தாண்டி வசூலித்தது. மிகப்பெரும் வெற்றி பெற்ற அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவர இருக்கிறது. அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட இருக்கும் இப்படத்தின் கதை தற்போது லீக் ஆகி இருக்கிறது.
முதல் பாகத்தில் கமல், ஜோதிகாவை திருமணம் செய்வது போன்று காட்டப்பட்டிருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் இறந்து விடுவதாக கதையை அமைத்துள்ளனர். ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்கும் கமலிடம் ஒரு புது வழக்கு ஒன்று விசாரணைக்காக வருகிறது.
அது என்ன மாதிரியான வழக்கு, அந்த விசாரணையில் கமல் எதையெல்லாம் கண்டுபிடித்தார் என்பதை பற்றிய கதைக்களமாக தான் வேட்டையாடு விளையாடு 2 இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவல் கமல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
விக்ரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் மிரள விட்ட கமல் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏற்கனவே இவர் பிக்பாஸ் மேடையில் கமலிடம் வாய்ப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.