தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் கமல் மற்றும் ரஜினி இருவரும் தான். இன்றும் இவர்களது படங்களின் ரிலீசின் போது ஒருவிதமான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
கமலஹாசன் சமீபகாலமாக சரியான திரைப்படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் அவரது ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்பு என்பது ஒரே மாதிரி தான் உள்ளது. அதிலும் இந்தியன் 2 படம் உருவாக போகிறது என்று சொல்லும்போதெல்லாம் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது என்பதுதான் உண்மை.
ஆனால் எதிர்பாராதவிதமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதில் தடுமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் தற்போது உடனடியாக கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.
இது ஒருபுறமிருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் அவருக்கு மாதிரியாக கொஞ்சம் பிரச்சனைகளை கொடுத்ததால் அடுத்தது எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என சிறுத்தை சிவா கூட்டணியில் இணைந்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தில் இருக்கும் அண்ணாத்த படம் 2021 தீபாவளிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
அதே போல் கமல் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படமும் தீபாவளியை குறிவைத்து உருவாக உள்ளது. இதனால் 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு கமல் மற்றும் ரஜினி படங்கள் ஒரே தேதியில் மோதிக் கொள்வதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். கடைசியாக இருவரும் மோதிக் கொண்ட போது கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படம் ரஜினியின் சந்திரமுகி படத்துடன் மோதி தோற்றது குறிப்பிடத்தக்கது.
