ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக தன் பயணத்தை ஆரம்பித்த கமல்ஹாசன் இன்று உலக நாயகன் என்ற பெரும் புகழுடன் முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். இந்த வயதிலும் அவர் சினிமா மேல் வைத்திருக்கும் காதலும், அதற்காக கொடுக்கும் அர்ப்பணிப்பும் நிச்சயம் வேறு யாராலும் செய்ய முடியாது. அதனாலேயே இவரை மற்ற மொழி நடிகர்கள் அனைவரும் வியந்து பார்க்கின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் விக்ரம் திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸையே அடித்து நொறுக்கிய கமல் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும் தயாராகத் தான் இருக்கிறார். ஆனால் அதற்கு அவருடைய உடல்நிலை தான் முன்பு போல் ஒத்துழைக்கவில்லை. தற்போது 68 வயதாகும் கமலுக்கு ஏற்கனவே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது.
இருப்பினும் அவருக்கு அவ்வப்போது சில உடல் பிரச்சினைகள் வரத்தான் செய்கிறது. ஆனால் அவர் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அரசியல், சினிமா என்று இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் கமல் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இப்படி விடாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவருக்கு கடந்த சில நாட்கள் ஆகவே சிறு உடல் சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இதை நாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட பார்த்திருக்கிறோம். அதாவது எப்போதுமே உட்காருவதற்கு சேர் போட்டால் கூட நின்று கொண்டே பேசும் கமல் சமீப காலமாக உட்கார்ந்தபடியே தான் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
அந்த வகையில் தன்னுடைய சோர்வை எல்லாம் போக்குவதற்காக அவர் இப்போது வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறாராம். ஏனென்றால் கமல் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் அப்படம் தொடங்கப்பட இருக்கிறது. அதன் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்குள் வெளிநாட்டில் சில சிகிச்சைகளை முடித்துவிட்டு புத்துணர்வோடு திரும்பிவர அவர் முடிவெடுத்து இருக்கிறாராம்.
அது மட்டுமல்லாமல் அவர் அடுத்தடுத்த படங்களை ஒப்புக் கொள்ளாமல் வருடத்திற்கு ஒரு படத்தில் நடிப்பது மற்றும் நான்கு படங்களை தயாரிப்பது என பிளான் செய்துள்ளார். அப்படி பார்த்தால் விக்ரம் திரைப்படத்தின் அடுத்த பாகம் இந்த வருடம் ஆரம்பிப்பதற்கு சாத்தியமே கிடையாது. தற்போது தளபதி 67 திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் அடுத்த வருடம் மீண்டும் கமலுடன் கூட்டணி போட இருக்கிறார்.