விக்ரம்-3யில் மிருகத்தனமான வில்லனாக இவரை பார்ப்பீங்க.. பேட்டியில் உறுதி செய்த கமல்

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் தற்போது தியேட்டர்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. கமல் நடிப்பில் இதுவரை எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. ஆனால் இந்த விக்ரம் திரைப்படம் அதை எல்லாம் தாண்டும் அளவிற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே பல கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் இன்னும் அதிகரித்து ஒரு வாரத்திலேயே 100 கோடியை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதிலும் முக்கியமாக படத்தின் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருக்கும் சூர்யாவின் நடிப்பு பலரையும் மிரட்டியுள்ளது. விரைவில் இந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யாவின் மிரட்டல் நடிப்பை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையுமா என்ற சந்தேகமும் அனைவருக்கும் இருக்கிறது. அதை தீர்க்கும் வகையில் கமல்ஹாசன் தற்போது ஒரு வீடியோ மூலமாக ரசிகர்களிடம் உரையாடி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது தரமான படைப்புகளை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் என்றும் மறந்ததில்லை.

அதேபோன்று விக்ரம் திரைப்படத்தின் மூலமாக தன்னையும், பட குழுவினரையும் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது எங்கள் பாக்கியம். அந்த வகையில் நான் அனிருத், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

மேலும் சில நிமிடங்கள் மட்டுமே நடித்து அரங்கையே அதிர வைத்த சூர்யா இதை அன்பிற்காக மட்டுமே செய்தார். அவருக்கு செலுத்தும் நன்றியை நாங்கள் இருவரும் இணையும் அடுத்த படத்தின் மூலமாக காட்ட இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் ரோலக்ஸ் கதாபாத்திரம் அடுத்த படத்திலும் தொடரும் என்று தெரிகிறது. இதனால் சூர்யாவுடன் மோத இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த படத்தில் சூர்யாவுக்கு 40 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.