ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் இந்திய சினிமாவில் பாலிவுட் தான் உச்சத்தில் இருந்தது என்று சொல்லலாம். உலக அரங்கில் அத்தனை அங்கீகாரமும் பாலிவுட் சினிமாவுக்கு தான் கிடைத்துக் கொண்டிருந்தது. மேலும் இவர்களால் தான் நல்ல கதைகளை தர முடியும், வசூலை குவிக்க முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்குள்ளே இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே பாலிவுட் சினிமா தோல்வி மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற பதான் திரைப்படத்திற்கு முன்புவரைக்கும் ஹிந்தி உலகில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய ஹிட் படங்கள் எதுவுமே வெளிவரவில்லை. கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கப்பட்ட படங்களும் மண்ணை கவ்வி கொண்டு தான் இருந்தன. அதே நேரத்தில் தென்னிந்திய சினிமா மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டது.
தமிழ், மலையாளம், கன்னட மொழி திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றதோடு, வசூலையும் வாரி குவித்தது. தற்போது தோல்வி மேல் தோல்வி சந்தித்து வரும் பாலிவுட் சினிமாவின் இயக்குனர்கள் அப்படியே தென்னிந்திய சினிமாக்களின் பக்கம் தங்கள் கவனங்களை செலுத்த ஆரம்பித்து விட்டனர். அடுத்தடுத்து ரீமேக் படங்களும் உருவாகி கொண்டிருக்கின்றன.
தமிழில் வெளியான பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ராட்சசன், வீரம், கைதி போன்ற படங்களை பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் ரீமேக் செய்து நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஹிந்தி சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான கரண் ஜோகர் ஒரு தமிழ் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார். கோலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருக்கும் மாரி செல்வராஜின் கதையைத்தான் இவர் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, பா ரஞ்சித் தயாரிப்பில், கதிர் மற்றும் ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் திரைப்படத்தை தான் கரண் தற்போது ரீமேக் செய்ய இருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க திருநெல்வேலி பகுதியை பின் களமாகக் கொண்டு அங்கு நடக்கும் ஆதிக்க கொடுமைகளையும், சாதிய தாக்கத்தையும் மையப்படுத்தி வெளியான திரைப்படம் ஆகும்.
இந்த கதைக்களத்தை கரண் ஜோகர் எப்படி இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தை இவர்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு டேமேஜ் செய்து விட்டார்கள். தற்போது பரியேறும் பெருமாள் படத்தை எப்படி எடுக்க போகிறார்கள் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.