நடிகர் விஜய் மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் அன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தளபதி விஜய் வாரிசு பட ரிலீசுக்கு பிறகு கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் லியோ திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். முதல் கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீரில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக ஜம்மு காஷ்மீருக்கு படக்குழு தனி விமானம் மூலம் சென்றது.
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடும் குளிரால் மொத்த பட குழுவும் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் , இந்த படக்குழுவில் கலந்து கொண்ட முக்கிய பிரபலம் ஒருவரின் அம்மா இறந்து விட்டதால் அவர் சென்னை திரும்பி இருக்கிறார். இதனால் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக கூட சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சே தான் அந்த பிரபலம். அவருடைய தாயார் இறந்த நிலையில் சென்னை திரும்பிய மனோஜ் எல்லா சடங்குகளையும் முடித்துவிட்டு உடனே ஜம்மு காஷ்மீர் கிளம்பி விட்டாராம். தான் இல்லாவிட்டால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்று இப்படி செய்து இருக்கிறார் அவர்.
தனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய துயரத்தை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் படக்குழுவை பற்றியும் பணம் முதலீடு செய்த தயாரிப்பாளர் பற்றியும் மனோஜ் பரமஹம்சே யோசித்து இருப்பது அனைவரையும் மெய்சிலிர்க்க செய்திருக்கிறது. தற்போது இணையத்தில் இந்த விஷயம் வைரலாகி வருகிறது.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சே தளபதி விஜய் நடித்த மதுர மற்றும் திருப்பாச்சி படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். மேலும் விஜய்யின் பீஸ்ட், நண்பன் திரைப்படங்களிலும் இவர்தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திலும் இவர்தான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.