மாநாடு முதல்நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த ஹேட்டர்ஸ்.. உங்க உழைப்பு வீணா போகல சிம்பு

சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் எப்போதோ திரைக்கு வரவேண்டியது. ஆனால், சில பல பினான்சியல் பிரச்சனை காரணமாக மாநாடு படத்திற்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது. இறுதியாக படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. இருப்பினும் படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவு வரை அந்த சிக்கல் தொடர்ந்தது.

படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் நாளை வெளியாகாது என டிவிட் செய்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிலர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக பேசி முடித்தனர். இதன் பின்னரே படம் திட்டமிட்டபடி நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தொடர்ந்து பிரச்சனை எழுந்த காரணமாக படத்தில் அப்படி என்னதான் உள்ளது என்பதை பார்ப்பதற்காகவே நேற்று ரசிகர்கள் திரையரங்கிற்கு படையெடுத்தனர்.சிம்பு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி என பலர் நடித்துள்ளனர்.

ஒரு டைம் லூப் கதையாக உருவாகியுள்ள மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் தொடங்கியது முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்வதோடு, ரசிகர்களையும் இருக்கை நுனியில் அமர வைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

வெங்கட் பிரபு மங்காத்தா போன்ற ஒரு அற்புதமான படைப்பை மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளியான மாநாடு படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாநாடு படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாக்ஸ் ஆபீஸில் சிங்கப்பூரில் முதல் இடத்திலேயும், மலேசியாவில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது மாநாடு. கர்ணன், மாஸ்டர், அண்ணாத்த ஆகிய படங்களுக்கு அடுத்து முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக மாநாடு தற்போது ரெக்கார்ட் செய்துள்ளது.

இதுவரை சிம்புவின் வேறு எந்த படங்களுக்கும் இல்லாத எதிர்பார்ப்பும், வரவேற்பும் மாநாடு படத்திற்கு கிடைத்துள்ளது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சிம்பு மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ள படம் என்பதாலும், இதுவரை பார்க்காத சிம்புவை இப்படத்தில் காட்டி இருப்பதாலும் ரசிகர்கள் மாநாடு படத்திற்கு நல்ல வரவேற்பு அளித்து வருகிறார்கள்.