Maamannan: கடந்த சில நாட்களாக மாமன்னன் பற்றிய சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் நல்ல வசூல் புரிந்திருந்தாலும் சில எதிர்மறை விமர்சனங்களையும் சந்தித்தது.
இதற்கு முக்கிய காரணம் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் அவர் தேவர் மகன் குறித்து கமல் முன்பாக வைத்த விமர்சனம் தான். அதாவது தேவர் மகன் சாதிய வெறியை தூண்டி இருந்ததாகவும் இப்படம் தனக்கு ஒரு மனப்பிறழ்வை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதற்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஏனென்றால் தேவர் மகன் பங்காளிகளுக்குள் நடக்கும் சண்டை பற்றிய கதையாகத் தான் எடுக்கப்பட்டிருந்தது. அப்படம் வந்த காலகட்டத்தில் சில வன்முறைகள் இதை வைத்து நடந்து இருந்தாலும் கமல் அந்த ஒரு நோக்கத்தில் இப்படத்தை எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் தேவர்மகன் பற்றிய மாரி செல்வராஜின் புரிதல் பல விவாதங்களுக்கு தொடக்க புள்ளியாக அமைந்தது. அதை தொடர்ந்து வெளியான மாமன்னன் படத்தில் ஆதிக்க அரசியலை பற்றி அவர் வெளிப்படையாகவே தோலுரித்துக் காட்டி இருந்தார். ஆனால் தற்போது அதுவே உல்டாவாக மாறி இருக்கிறது. அதாவது ரத்தினவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பகத் பாசில் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
மேலும் ரத்னவேலு கதாபாத்திரம் எங்கள் சமூகத்தை சேர்ந்தது என ஒவ்வொருவரும் போஸ்டர், வீடியோ ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றனர். இதுதான் சினிமா விமர்சகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த விஷயம் வெறுக்கப்பட வேண்டும் என்று இயக்குனர் படத்தை எடுத்தாரோ அதற்கு எதிர்மறையாக தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
மேலும் சாதிய வெறியை தூண்டியது சக்தி வேலா, ரத்தினவேலா என்ற கேள்வியையும் இப்போது கமல் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில் மாமன்னன் மூலம் இவர் ஒரு நெருப்பை பற்ற வைத்திருப்பதாகவும், கமலை பற்றி சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது எனவும் ரசிகர்கள் இப்போது சமூக வலைதளங்களில் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.