இன்றைய கால தொழில்நுட்பத்தில் ஒரு நடிகரோ, நடிகையோ யாராக இருந்தாலும் சரி இரட்டை வேடத்தில் ஒரு படத்தை இயக்குவது சுலபமாக உள்ளது. அந்த அளவிற்கு தமிழ் சினிமா உலகளவில் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது. இதனிடையே இரட்டை வேட கதாபாத்திரத்தில் ஏற்று அன்றைய காலகட்டங்களில் நடிக்க வேண்டுமென்றால் அது சாதாரண விஷயமல்ல.
1960 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்டோர் இரட்டை வேடங்களில் சவாலாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்கள். அப்போதே இரட்டை வேட காட்சிகளில் ஒன்றாக எடுக்கும்போது எடிட்டர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவர்களுக்கு முன்பாகவே 1940-ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகரை பற்றிதான் தற்போது பார்க்கப் போகிறோம்.
இந்தியா சுதந்திரம் ஆவதற்கு முன் தமிழ் சினிமாவில் பேசும் படங்கள், ஊமை படங்கள் என பல திரைப்படங்கள் வந்ததுண்டு. ஆனால் முதன்முறையாக தி மேன் இன் தி அயன் மாஸ்க் என்ற ஆங்கில நாவலை தழுவி இயற்றப்பட்ட திரைப்படம் தான் உத்தமபுத்திரன். 1940 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் நடிகர் பி.யு சின்னப்பா, எம்.வி.ராஜம்மா உள்ளிட்டோர் நடித்திருப்பர்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாரதியார் எழுதிய பாடல் வரிகள் இத்திரைப்படத்தில் தான் முதன்முதலாக ஒலிபரப்பப்பட்டது. அப்போது சுதந்திர தாகத்தில் இருந்த நம் இந்திய தமிழ் மக்களுக்கு இப்பாடல் தான் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிகர் பி.யு சின்னப்பா இரட்டை வேட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நகைச்சுவையும், சுதந்திர போராட்டத்தையும் முன் வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் காட்சி பார்க்கும் அனைவருக்கும் அன்றைய காலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரட்டை கதாபாத்திரம் என்றால் தனித்தனி காட்சிகள் வைத்து படத்தை முடித்து விடலாம் என்பதுதான் அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த சவாலாக இருந்தது.
ஆனால் பி.யு.சின்னப்பா இரண்டு கெட்டப்புகளில் ஒரே காட்சியில் இடம் பெறுவதை பார்த்து அப்போது இருந்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் தங்களை மெய்மறந்து போனார்கள் . இந்த காட்சிதான் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட மிகவும் கடினமான காட்சியாகும். 175 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்களில் ஓடி அன்றைய காலத்திலே வெள்ளிவிழா கண்ட இத்திரைப்படம் தான் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் , தனுஷ் என இரட்டை வேடத்தில் நடிகர்கள் நடிக்க வேறாக இருந்த திரைப்படம் எனலாம்.