இசையமைப்பாளர் கீரவாணி, இன்று நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்காமல் இருந்திருந்தால், இவரை இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாமலேயே போயிருக்கும். தெலுங்கில் கீரவாணியாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளர் மரகதமணி. இயக்குனர் கே .பாலச்சந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை அடுத்து இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் மேடையை அலங்கரித்த கீரவாணியை, இன்னும் நன்றாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் 2kகிட்ஸ் வரை ரசிக்கும் ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலுக்கு இசையமைத்தவர் தான் இந்த கீரவாணி. இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளர்.
கீரவாணி இந்த இடத்திற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2014 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 9 /12/ 1989 ஆம் ஆண்டு அவர் சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பாடலை தொடங்கும் போதே சினிமாவில் இருந்து விலகும் தேதியையும் முடிவெடுத்து விட்டதாக கூறினார்.
அதன்படி 8 /12 /2016 ஆம் ஆண்டு தான் சினிமாவில் இருந்து விலகி விடுவதாக 2014 ஆம் ஆண்டு அறிவித்துவிட்டார் கீரவாணி. ஆனால் அவர் எதற்காக, என்ன பிரச்சனையால் அப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால் சினிமாவில் இருந்து விலகிவிட வேண்டும் என்பதில் மட்டும் ரொம்பவும் உறுதியாக இருந்திருக்கிறார்.
இதற்கிடையில் கீரவாணிக்கு கிடைத்த அறிமுகம் தான் இயக்குனர் ராஜமவுலி. ராஜமவுலியின் மகதீரா திரைப்படத்திலிருந்து இருவருடைய பயணமும் தொடர்ந்து வருகிறது. நான் ஈ, பாகுபலி போன்ற படங்களில் இசை அமைத்ததன் மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் தன்னுடைய திறமையால் கவர்ந்திருக்கிறார் இந்த இசையமைப்பாளர்.
இன்று ‘நாட்டு நாட்டு’ பாடல் மூலம் ராஜமவுலிக்கு பெருமை சேர்த்ததோடு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலக அரங்கில் செய்து இருக்கிறார். சினிமாவை விட்டு விலகுவதாக இருந்த கீரவாணியை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்து இன்று ஆஸ்கர் நாயகனாக அழகு பார்த்து இருக்கிறார் இயக்குனர் ராஜமவுலி.