விஜய் ரசிகர்கள் மீது தடியடி.. ரிலீஸுக்கு முன்பே போலீசாருக்கு தலைவலி கொடுக்கும் பீஸ்ட்

நடிகர் விஜய் நடிப்பில் வருகிற 13ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பீஸ்ட். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை காண அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். படம் வெளியாக சில நாட்களே உள்ள நிலையில், படத்தின் புக்கிங் ஒப்பனான சில வினாடிகளிலேயே விற்று தீர்ந்து வருகின்றன. முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளை திரையரங்கினர் ஆன்லைனில் வெளியிடாமல் நேரடியே அதிக விலைக்கு விற்பதாக அங்காங்கே குற்றங்கள் சாட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடலூர் புதுநகர் காவல் நிலையம் அருகே உள்ள திரையரங்கில் படத்திற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. அங்கு டிக்கெட் வாங்க வந்த விஜய் ரசிகர் மன்றத்தினர் திரையரங்கம், ரசிகர்களுக்கான டிக்கெட்டை தருவதில்லை என்றும், டிக்கெட்டில் அதற்கான விலையை குறிப்பிடாமல் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறி திரையரங்கம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் புதுநகர் காவல்துறையினர் வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். திரையரங்கில் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் எந்தவிதமான விலையும் குறிப்பிடப்படாமல், 200 – 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விஜய் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி சாலையிலிருந்து எழாத காரணத்தினால், போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதில் 10-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இவ்வாறான சாலை மறியல்கள், போராட்டங்கள் என பல பண்ணினாலும், கேட்க யாரும் இல்லை என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் இதனை தொடர்ந்து வருகின்றனர். இந்த பிரச்சனையை சென்னையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் கடலூரில் உள்ள மன்றத்தினர் முறையிட்டுள்ளார். இந்த பிரச்சனை விஜய்யிடம் கொண்டு சென்று, அவர் தலையிட்டால் தான் அதற்கான தீர்வு கிடைக்கும் எனவும் கூறுகின்றனர்.

என்ற போதிலும், படம் நடிக்கும் நடிகனால் எந்த அளவிற்கு அதன் வியாபார விஷயங்களில் தலையிட முடியும் என்பது சினிமா வட்டத்தில் வியாபாரம் செய்யபவர்களுக்கே தெரியும். அரசியலில் முனைப்பு காட்டிவரும் விஜய் இதைபோன்ற பொதுவான விஷயங்களிலும் தன்னுடைய ரசிகனுக்காக தன்னுடைய நிலைப்பாட்டை கூறுவாரா? என்பதே பலரின் கேள்வி.

ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகும் முன் மற்ற காட்சிகளை ஒன்லைனில் வெளியிடும் திரையரங்கு உரிமையாளர்கள் முதல் நாள் முதல் இரண்டு காட்சிகளை அவ்வாறு வெளியிடாமல் நேரடியே அதிக விலைக்கு விற்று வரும் நிலை தொடர்ந்து வருகிறது. இதனை பெரிதாக யாரும் கண்டுகொள்வதும் இல்லை. ஆனால் எப்படியும் முதல் காட்சியை பார்த்து விட வேணும் என்ற பூரிப்பில் ரசிகர்களும் அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.