அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் முழுவதும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அஜித் மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள வலிமை படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
முன்னதாக இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால் வலிமை படத்தின் வெளியீட்டை பொங்கலுக்கு மாற்றி வைத்தனர்.
பொங்கலுக்கு வலிமை மட்டும் வெளியாகவில்லை. அதனுடன் சேர்ந்து இன்னும் 5 பெரிய படங்களும் வெளியாக உள்ளதாம். அதுவும் முன்னணி ஹீரோக்களின் படங்கள். எனவே அடுத்தாண்டு பொங்கல் களைகட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பொங்கல் ரேசில் முதல் இடத்தில் இருப்பது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருப்பதால், நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து இரண்டாவதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தவிர கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு, அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் வீரமே வாகை சூடும் படம் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா ஆகிய படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதில் எத்தனை படங்கள் உறுதியாக பொங்கலுக்கு வெளியாகும் என்பது நாளடைவில் தெரியவரும்.