கடைசில போர் தொழிலும் திருட்டு கதையா?.. பிரச்சனையே வேண்டாம் என ஒதுங்கிய இயக்குனர்

Por Thozhil: சினிமாவில் திருட்டு கதைகள் சர்ச்சை என்பது எப்போதுமே ஓயாத ஒன்றாக தான் இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கூட திருட்டு கதை தான் என சமீபத்தில் ஒரு மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியது. இது ஒரு ஹாலிவுட் சீரிஸின் அப்பட்டமான கதை என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கினார்கள். இருந்தாலும் படக்குழு தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை.

தற்போது இந்த கதை திருட்டு சிக்கலில் சமீபத்தில் வெளியான போர் தொழில் திரைப்படம் சிக்கி இருக்கிறது. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆகும். லோ பட்ஜெட்டிலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தது. இந்த படத்தின் கதை திருட்டு என்பது பலருக்கும் அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது.

நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் போர் தொழில். இதில் இவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் கதை தான் இந்த படம். காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் இருந்ததால் வெற்றி பெற்றது.

புது இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளரிடம் தன்னுடைய கதை ஒன்றை சொல்லி இருக்கிறார். அந்த தயாரிப்பாளருக்கும் இந்த கதை ரொம்பவும் பிடித்து போக விரைவில் படத்தின் வேலைகளை ஆரம்பிப்போம் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். இந்நிலையில் போர் தொழில் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது, இந்த படத்தை பார்த்த அந்த இயக்குனருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

அந்த இயக்குனர் தயாரிப்பாளரிடம் சொன்ன கதையின் இரண்டாம் பாதியும், போர் தொழில் திரைப்படத்தின் இரண்டாம் பாதியும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறது. இதனால் அந்த இயக்குனர் தயாரிப்பாளரிடம் சென்று இது பற்றி பேசி இருக்கிறார். தயாரிப்பாளர் நாம் திரைப்பட சங்கத்தில் இதைப் பற்றி புகார் கொடுப்போம் என்று சொல்லி இயக்குனரை அழைத்திருக்கிறார்.

ஆனால் இயக்குனரோ வேண்டவே வேண்டாம், தமிழ் சினிமாவில் இதுபோன்று கதை திருட்டு புகார் கொடுத்த இயக்குனர்கள் யாருமே அதன் பின்னர் படங்கள் இயக்கவில்லை. இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருக்கிறார்கள். எனக்கும் அது போன்ற நிலைமை வேண்டாம். நான் வேறொரு கதை உடன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டாராம்.